ஈரானை ஆளுவது யார்? ஜனாதிபதியை ஓரங்கட்டிய ராணுவம்!

ஈரான் – அமெரிக்கா போர் ஒருபுறம் உக்கிரமாக நடந்துகொண்டிருக்க, ஈரானுக்குள்ளேயே இப்போது ஒரு மிகப்பெரிய அதிகாரப் போர் வெடித்துள்ளது. ஈரானை உண்மையில் ஆளுவது யார்? ஜனாதிபதியா அல்லது ராணுவமா? என்ற கேள்வி இப்போது உலக நாடுகளைத் தலைசுற்ற வைத்துள்ளது.

ஈரானின் புதிய உச்சக்கட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட மொஜ்தபா கமேனியைச் சுற்றி, அந்த நாட்டின் பலமிக்க புரட்சிகர காவல்படையான ஐ.ஆர்.ஜி.சி (IRGC) ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு வளையத்தை அமைத்து அவரைத் தனிமைப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. இதனால் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அதிகாரமற்ற ஒரு பொம்மை போல மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் தற்போதைய அதிர்ச்சித் தகவல்.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரானின் அரசியல் சூழல் ஒரு மிகப்பெரிய மர்மமாக மாறியுள்ளது. முன்னாள் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமேனி பொறுப்பேற்றார். ஆனால், கடந்த பல வாரங்களாக அவர் எங்கே இருக்கிறார், அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. அவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்க உளவுத்துறை கூறினாலும், ஈரானிய ராணுவமோ அவரை ஒரு ரகசிய இடத்தில் வைத்துப் பாதுகாப்பதாகக் கூறுகிறது.

ஜனாதிபதி பெசெஷ்கியன் அவரைச் சந்திக்க முயன்றும், ராணுவம் அதற்கு அனுமதி வழங்க மறுப்பது ஈரானில் ஒரு “நிழல் உலக ஆட்சி” நடப்பதையே உறுதிப்படுத்துகிறது. ஈரானின் உளவுத்துறை அமைச்சரை நியமிக்கும் ஜனாதிபதியின் முயற்சியை, ஐ.ஆர்.ஜி.சி தளபதி அகமது வாஹிதி அதிரடியாகத் தடுத்து நிறுத்தியுள்ளார். “போர்க்காலத்தில் அனைத்து முக்கியப் பதவிகளையும் ராணுவம் தான் தீர்மானிக்கும்” என்று அவர் வெளிப்படையாகவே முழங்கியுள்ளார்.

இதன் மூலம் ஈரானில் ஒரு அமைதியான ராணுவப் புரட்சி (Silent Coup) நடந்து வருவதாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதிக்குத் தெரியாமல் பல முக்கிய முடிவுகளை ராணுவக் கவுன்சிலே எடுத்து வருகிறது. ஒரு வல்லரசுடன் போரிடும் வேளையில், ஈரானுக்குள்ளேயே இப்படி ஒரு அதிகார மோதல் வெடித்திருப்பது அந்த நாட்டின் எதிர்காலத்தைப் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ட்ரம்ப்பின் மிரட்டல்களை விட, ஈரானுக்குள் இருக்கும் இந்த உள்நாட்டு அரசியல் குழப்பம் தான் இப்போது அந்த நாட்டு மக்களுக்குப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஜனாதிபதி பெசெஷ்கியன் தனது அதிகாரத்தை மீட்கப் போராடினாலும், ராணுவத்தின் பிடி நாளுக்கு நாள் மோஜ்தபா கமேனியைச் சுற்றி இறுகிக்கொண்டே போகிறது. ஈரானின் நிஜமான ராஜா யார் என்பது இன்னும் சில நாட்களில் வெளிச்சத்திற்கு வரும்.

Related News

Latest News