Friday, March 28, 2025

சீட்டுக்கட்டு போல ‘சரிந்த’ CSK யாருப்பா ‘இந்த’ விக்னேஷ் புதூர்?

ரசிகர்கள் வெறித்னமாக வெயிட் பண்ணிய சென்னை-மும்பை போட்டி, மார்ச் 23ம் தேதி மாலை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. கேப்டன் ஹர்திக் பாண்டியா, ‘டெத் ஸ்பெஷலிஸ்ட்’ பும்ரா இருவரும் இல்லாமல் களமிறங்கிய போதே, மேட்சின் முடிவு மும்பைக்குத் தெரிந்து போயிருக்கும்.

ஏனெனில் சேப்பாக்கம் சென்னை சூப்பர் கிங்ஸின் ஹோம் கிரவுண்ட் என்பதால், மைதானத்தின் ஒவ்வொரு இஞ்சும் சென்னைக்கு அத்துபடியாகும். குறிப்பாக டாஸிலேயே கேப்டன் ருதுராஜ் ஜெயித்து விட்டார். மும்பைக்கு எதிராக சென்னையின் நூர் அஹமது, கலீல் அஹமது இருவரும் போட்டிபோட்டு விக்கெட் வேட்டை நடத்தினர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, 18வது முறையாக டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்தார். அதிகபட்சமாக மும்பையில் திலக் வர்மா மட்டுமே 31 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் வருவதும், போவதுமாகவே இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை 9 விக்கெட்களை இழந்து, 155 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சென்னை களமிறங்கியது. ராகுல் திரிபாதி, சிவம் துபே ஏமாற்றினாலும் கேப்டன் ருதுராஜ், ரச்சின் ரவீந்திரா இருவரும் அதிரடியாக ஆடி, சென்னையின் வெற்றியை உறுதி செய்தனர்.

ஆரம்பத்தில் இருந்தே ஒன் சைடாக சென்ற இந்த மேட்சை சற்று இழுத்துப்பிடித்து, மும்பையின் பக்கமாக டர்ன் செய்த பெருமை இளம்வீரர் விக்னேஷ் புதூரையே சேரும். அறிமுக T20 தொடரிலேயே 3 விக்கெட்களை வீழ்த்தி அனைவரையும் ‘யார்ரா இந்த பையன்’ என தேட வைத்திருக்கிறார்.

முதல் ஓவரில் கேப்டன் ருதுராஜ், 2வது ஓவரில் துபே, மூன்றாவது ஓவரில் ஹூடா என, சென்னையின் டாப் ஆர்டரை சீட்டுக்கட்டு போல சரித்து விட்டார். இதனால் தான் மேட்ச் 20வது ஓவர் வரை சென்றது. இல்லையெனில் சென்னை இருந்து வேகத்திற்கு, 15 ஓவர்களிலேயே ஆட்டம் முடிந்து போயிருக்கும்.

மேட்ச் முடிந்ததும் IPL தொடரின் ஐகான் தோனி, விக்னேஷை தட்டிக்கொடுத்து பாராட்டி இருக்கிறார். ஒரே போட்டியில் கிரிக்கெட் லெஜெண்டுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள, விக்னேஷ் குறித்து இங்கே பார்க்கலாம்.

அண்டை மாநிலமான கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் புதூர். இவரின் தந்தை ஆட்டோ ஓட்டுநர். விக்னேஷ் புதூர், முதலில் வேகப்பந்து வீச்சாளராகதான் இருந்தார். உள்ளூர் போட்டியின்போது, புதூர் சிறந்த லைன், லெந்தில் அபாரமாக பந்துவீசி அசத்தியதை பார்த்த, கேரளாவின் உள்ளூர் கிரிக்கெட் வீரர் முகமது செரிப், ‘லெக் ஸ்பின்னராக மாறினால் உன்னால் அபாரமாக செயல்பட முடியும்’ எனக் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்துதான், இடது கை ரிஸ்ட் ஸ்பின்னராக விக்னேஷ் புதூர் மாறினார்.

இடது கை ரிஸ்ட் ஸ்பின்னராக விக்னேஷ் புதூர், தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில், MI கேப்டவுன் அணிக்கு நெட் பௌலராக சென்றார். வலைப்பயிற்சியில் அபாரமாக பந்துவீசியதால்தான், 18ஆவது சீசனுக்கான ஏலத்தில், இவரை 30 லட்சத்திற்கு வாங்கினார்கள்.

மிகக்குறைந்த போட்டிகளில் விளையாடி இருந்தாலும், விக்னேஷின் பந்துவீச்சைப் பார்த்து மும்பை மூத்த வீரர்களே மிரண்டு போயிருக்கின்றனர். வலைப்பயிற்சியின் போது ரோஹித், சூர்யகுமார், திலக் வர்மா மூவருமே இவரை எதிர்கொள்ள முடியாமல் திணற, இதையடுத்து தான் முதல் IPL போட்டியிலேயே ஆடும் லெவன் அணியில் விக்னேஷுக்கு இடம் கிடைத்துள்ளது.

கேரளா சீனியர் அணிக்காக கூட விளையாடாத விக்னேஷ், உள்ளூர் போட்டிகளில் பந்து வீசியதை பார்த்து, மும்பை அணி அவரை, தென் ஆப்ரிக்காவுக்கு அனுப்பி பயிற்சி பெற வைத்தது. இதற்கு ஆன செலவுகள் அனைத்தையும் அந்த அணியே ஏற்றுள்ளது.

மும்பையின் இந்த அசாத்திய நம்பிக்கையை, முதல் ஆட்டத்திலேயே விக்னேஷ் காப்பாற்றி இருக்கிறார். இதனால் விரைவில் இந்திய அணியிலும், விக்னேஷ் இடம் பிடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் பும்ரா, ஹர்திக், குருணால், திலக் வர்மா போன்ற மிகச்சிறந்த வீரர்களை மும்பை, இந்திய அணிக்குத் தேடிக் கொடுத்துள்ளது.

அந்த வரிசையில் லேட்டஸ்டாக விக்னேஷ் புதூரும் இணைந்துள்ளார். என்று சமூக வளைதளங்களில் மும்பை அணியை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். முதல் மேட்சில் தோல்வி அடைந்தாலும் ஹர்திக், பும்ரா இருவரும் விரைவில் அணியில் இணைவார்கள் என்பதால், மீதமுள்ள போட்டிகளில் மும்பை வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Latest news