Thursday, December 26, 2024

ரஷ்யாவின் அடுத்த அதிபராக போவது யார்?

பிப்ரவரி மாதம் முதல் உலகையே உலுக்கி வரும் ரஷ்யா உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரும் திசையில் சற்றும் பயணிக்கவில்லை.

இந்த போரினால் உலகம் முழுவதும் பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்கள் எதிரொலித்தாலும் குறிப்பாக ரஷ்யாவின் உள்நாட்டு சூழல் பெரிதும் சாதகமாக இல்லை.

இருபது ஆண்டுகளுக்கு மேல் ரஷ்யாவை ஆட்சி செய்து வரும் புடினுக்கு தற்போது வயது 69.  

2036ஆம் ஆண்டு  வரைக்கும் புடின் ஆட்சியில் நீடிப்பதற்கு ஏதுவாக சட்ட சிக்கல்கள் ஏற்கனவே கலைக்கப்பட்டு இருந்தாலும்,  பார்கின்சன்ஸ் அல்லது நரம்பியல் சார்ந்த பிரச்சினையால் புடினின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், புடின் விரைவில் அடுத்த அதிபரை நியமிக்க கூடும் என ரஷ்ய அரசியலை கூர்ந்து கவனிக்கும் சர்வதேச பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. தனக்கு நெருக்கமான மற்றும் நம்பிக்கையான நபரைத் தான் புடின் தேர்ந்தெடுப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புடினின் அரசியல் வட்டத்தில் அதிபராகும் வாய்ப்பு யாருக்கு பிரகாசமாக உள்ளது என்பதை இத்தொகுப்பில் காண்போம்.

ரஷ்ய அரசியலை பாடமாக எடுக்கும் அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ரட்லேண்ட்,  புடின் கடைசி நிமிடம் வரைக்கும் இன்னொரு அதிபரை தேர்ந்தெடுக்க மாட்டார் என  கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான செர்ஜி ஷோய்கு, 20 வருடங்களாக புடினின் நம்பிக்கையை பெற்றதும் இல்லாமல் மக்களிடையே களப்பணியாற்றி தனி செல்வாக்கை பெற்றவர்.

ரஷ்யாவில் புடினுக்கு அடுத்தபடியாக அதிக பிரபலமான அரசியல்வாதியாக ஷோய்கு கருதப்பட்டாலும் 67 வயதாகும் அவருக்கு நேரம் சாதகமாக அமையாது என்றே கூறப்படுகிறது.

நீண்ட காலம் ஆட்சி செய்வதற்கு ஏற்ப, இளமையான ஒருவரையே புடின் தேர்ந்தெடுப்பார் என்ற வாதத்திற்கு  வலு சேர்க்கும் வகையில், 36 வயதான புடினின் நிர்வாகத் தலைவர் டிமிட்ரி கொவலெவ்வின் பெயர் பேசப்படுகிறது.

1999ஆம் ஆண்டு முதலில் தற்காலிக அதிபராக புடின் அரசியலில் கொடிகட்டி பறந்த போது அவருக்கு வயது 47.

தனக்கு பின் இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவர் தான் ரஷ்யாவை ஆள வேண்டும் என புடின் கருத்து தெரிவித்திருந்ததால், டிமிட்ரிக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

போரினால் ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் இடங்களை மறுசீரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள புடினுக்கு நெருக்கமான நபரான செர்ஜி கிரியென்கோ மற்றும் 2008 முதல் 2012 வரை அதிபராக இருந்த டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு போட்டியை கடுமையாக்கும் வகையில் இருக்கும் அடுத்த நபர் செர்ஜி சோப்யானின். 12 வருடமாக மாஸ்கோவின் மேயராக பதவி வகிக்கும் இவர் டியுமென் மாகாணத்திற்கு 2001இல் இருந்து 2005 வரை ஆளுநராக இருந்துள்ளார்.

பதவிக்கு வந்து மூன்றே ஆண்டுகளில் மாஸ்கோவின் வளர்ச்சியை 50 சதவீதம் அதிகரித்த சோப்யானின் எண்ணெய் வர்த்தகத்திலும் அதிக செல்வாக்கு பெற்றவராக இருப்பதால் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறார்.

இவர்கள் அனைவரை காட்டிலும் முக்கியமான நபர், ரஷ்ய அரசியலில் தீவிர தாக்கத்தையும், புடினுக்கு எதிரான அலையின் ஒற்றை முகமாக உலகம் முழுவதும் அறியப்படும் அலெக்ஸி நவால்னி ஆவார்.

புடின் அரசின் பல ஊழல்களையும் ஒடுக்குமுறைகளையும் நாட்டு மக்களுக்கு விளக்குவதால் அவ்வப்போது கைதாகும் அலெக்ஸி அதிபர் தேர்தலில் போட்டியிட 2018ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

ரஷ்ய அரசை விமர்சித்து அலெக்ஸி பதிவிடும் வீடியோக்களை மில்லியன் கணக்கில் மக்கள் பார்த்து வருகின்றனர்.

2020ஆம் ஆண்டு அலெக்ஸி விஷ மருந்து செலுத்தப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தனக்கு விஷம் வைத்தது புடின் அரசு என அலெக்ஸி காட்டமாக சாடி வந்த போதும், அந்த குற்றச்சாட்டை மறுத்த ரஷ்ய அரசு அலெக்ஸியை வேறு காரணங்கள் கூறி அடிக்கடி கைது செய்து வந்தது. ஜனநாயகத்துக்கு சாத்தியமில்லாத ரஷ்யாவில், புடின் அரசுக்கு எதிரான அலெக்ஸியின் தளராத போராட்டமும் தொடர்ந்து வருகிறது.

இக்கட்டான அரசியல் மற்றும் போர்சூழலுக்கு இடையே உடல்நிலைக் குறைவும் ஏற்பட்டிருக்கும் நிலையில் அடுத்து யார் அதிபராக தேர்வானாலும், தற்போதைய அரசின் வழியில் ஆட்சி நடக்க வேண்டும் என புடின் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட சில ரஷ்ய தலைவர்களின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்படும் செர்ஜி என்ற வார்த்தை வேலையாள் என அர்த்தம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest news