தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, இந்த 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதிதான் நடந்தது. கொரோனா காலம் என்பதால், அப்போது முன்கூட்டியே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை வெயிலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தலாமா? என்று தேர்தல் ஆணையம் யோசித்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி வரும்10 ம் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
