இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உருவான பாரம்பரிய உணவாக தால் மக்கானி மக்களிடம் சிறப்பிடம் பெற்றுள்ளது. உளுத்தம்பருப்பு, வெண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் க்ரீம் சேர்ந்து தயாரிக்கப்படும் இந்த வடஇந்திய சுவையான உணவு, திருமண விருந்துகள் உள்ளிட்ட பல்வேறு விழாக் காலங்களில் முக்கிய இடம்பெறும்.
ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு காட்சி, பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கட்டுமானப் பணிகளில் பயன்படும் ஜேசிபியை பயன்படுத்தி தால் மக்கானியை பரிமாறும் காட்சி பார்வையாளர்களிடையே சுகாதார சந்தேகங்களை கிளப்பியுள்ளது. பொதுவாக அகழ்வுப் பணிகள், இடிப்பு, விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஜேசிபி, இங்கு விசித்திரமாக சமையல் கருவியாக மாறியுள்ளது.
வீடியோவில், ஒரு மிகப்பெரிய அண்டாவில் சமைக்கப்பட்ட தால் மக்கானியை ஜேசிபியின் உலோக கரண்டி மூலம் எடுப்பதை காண முடிகிறது. அண்டாவின் அருகில் ஒரு லாரி பிளாஸ்டிக் கவரில் மூடப்பட்டு நிறுத்தப்பட்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்களில் சிலர் இதை ‘புதுமையான யோசனை’ என வியந்தாலும், பெரும்பாலோர் ‘அசுத்தமானது’ மற்றும் ‘பாதுகாப்பற்றது’ என கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. ஒருவரோ “உணவு தரும் ஜேசிபி” என நையாண்டி செய்திருக்க, மற்றொருவர் “இது கிரீஸ், எண்ணெய், தூசி கலந்து வந்த தால்” என கிண்டல் செய்துள்ளார். பலரும் இவ்வாறு உணவுப் பாதுகாப்பை மீறும் செயல்கள் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது எங்கு நடந்தது என்பதை குறித்த எந்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.