Thursday, May 8, 2025

என்னடா இது பித்தலாட்டம்? பாகிஸ்தான் இந்தியா மேல் பதிலடி தாக்குதல் நடத்தியதா? பரவும் வீடியோவும் உண்மையும்!

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்திய ராணுவ தாக்குதல் குறித்து பல பொய்யான தகவல்கள் பாகிஸ்தான் தரப்பில் அள்ளி வீசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக, பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள 15 வெவ்வேறு இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக பொய் மூட்டையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள செய்திகளை இந்தியாவின் PIB மறுத்து, அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளதையடுத்து, இந்தியாவில் உள்ள ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கி அழித்ததாக பகிரப்பட்டுவரும் செய்தியுடன் கூடிய வீடியோ போலியானது என PIB ஆதாரங்களுடன் விளக்கியுள்ளது.

நள்ளிரவு தாக்குதலால் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் உச்ச கட்டத்தில் உள்ள நிலையில் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய படைத் தலைமையகத்தையும் பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக, பாகிஸ்தான் ஆதரவு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக வலம்வருகிறது. அதில், “இந்தியா… அப்பாவி பாகிஸ்தானியர்களை கொல்ல உங்கள் ஃபைட்டர் ஜெட்டுகள் கிளம்பிய ஸ்ரீநகர் ராணுவ தளம் அழிக்கப்பட்டது. உண்மையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது. உங்கள் ஆக்ரோஷத்திற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் ஜிந்தாபாத்“ என்று குறிப்பிடப்பட்டு, ஒரு வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த பதிவு பற்றி உண்மைத் தன்மையை சோதித்த இந்திய அரசின் Press Information Bureau, அந்த வீடியோ இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், 2024ல் பாகிஸ்தானின் கைபர் பக்த்துன்க்வாவில் நடந்த மத மோதலின்போது எடுக்கப்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளது. மேலும் இதுபோன்ற பதற்றமான சூழல்களின்போது, இப்படிப்பட்ட போலியான பதிவுகள் குறித்து மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டும் என்றும் PIB-யால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest news