அதென்ன ட்ரோன் கேமரா?

373
Advertisement

சினிமாவுல கதாநாயகர்கள் பறந்து பறந்து வில்லன்களோட
சண்டை போடுவாங்க…

இப்போ…பறந்து பறந்து போட்டோவும் வீடியோவும் எடுக்குது
கேமரா… புகைப்படம் எடுப்பதும் வீடியோ எடுப்பதும் கைவந்த
கலையாகிவிட்டது.

இந்தக் கேமராவைத் தொலைதூர இடத்திலிருந்தே இயக்குகிறார்கள்.
ஆளில்லாத குட்டி விமானமான இதை ட்ரோன் என்று அழைக்கிறார்கள்.

சென்ற நூற்றாண்டில் (20 ஆம் நூற்றாண்டு) தொலைதூரத்திற்குப்
பறந்துசென்று கண்காணிக்கும் ராணுவ நடவடிக்கைக்காக
உருவாக்கப்பட்டது ட்ரோன்.

முதன்முதலாக 1933 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணுவத்துக்காக
ட்ரோன் உருவாக்கப்பட்டது.

தற்போது காவல்துறைக் கண்காணிப்பு, விவசாயத்தில் மருந்து தெளிப்பு,
உணவு விநியோகம் என்று பல்நோக்குத் தேவைக்காகப் பயன்படுகிறது.
வெளிநாடுகளில் சினிமா படப்பிடிப்புகளிலும் ட்ரோன் பயன்படுத்தப்படுகிறது.

சிறிய ட்ரோன், பெரிய ட்ரோன், நானோ ட்ரோன், மைக்ரோ
ட்ரோன் என்று பல வகை ட்ரோன்கள் உள்ளன.

நானோ ட்ரோன் 250 கிராம் எடைக்குக் குறைவானது. மைக்ரோ
ட்ரோன் 250 கிராமிலிருந்து 2 கிலோ வரை எடையிருக்கும்.
ஒரு கிலோ மீட்டர் தூரம்வரை தொடர்ந்து ஒரு மணி நேரம்
பறக்கும் திறன்கொண்டது.

2 கிலோவிலிருந்து 25 கிலோ எடையிருந்தால் அது சிறிய ட்ரோன்.
இவை மூன்றுமுதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம்வரை பலமணி
நேரம் பறக்கும்.

25 கிலோ முதல் 150 கிலோ எடைகொண்ட ட்ரோன் நடுத்தர வகை.
9 முதல் 10 கிலோமீட்டர் தொலைவு பறக்கும். பல மணி நேரம்
பறக்கும் ஆற்றல்கொண்டது.

அதற்கு மேற்பட்ட எடைகொண்டது பெரிய ட்ரோன். ஒரு நாள்
முழுவதும் பறக்கும் திறன்கொண்டது.

நானோ வகை ட்ரோன்களைத் தவிர மற்ற வகை ட்ரோன்களைப்
பயன்படுத்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம்
அனுமதி பெறவேண்டும்.

இதற்காக இந்தத் துறை இயக்குநரிடம் பதிவுசெய்து தனி
அடையாள எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

50 அடிகளுக்குக் கீழ் பறக்கும் நானோ வகை ட்ரோன்களுக்கும்,
200 அடிக்கும் கீழ் பறக்கும் மைக்ரோ வகை ட்ரோன்களுக்கும்
அனுமதி தேவையில்லை. இருந்தாலும், அருகிலுள்ள காவல்
நிலையத்தின் அனுமதியைப் பெற்றே இவ்வகை ட்ரோன்களைப்
பறக்கவிடவேண்டும்.

400 அடி உயரத்துக்குமேல் ட்ரோன்களால் பறக்க இயலாது.
அனுமதி பெறாமல் ட்ரோன்களை இயக்கமுடியாது. ட்ரோன்களைப்
பகலில் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்களை வாங்கியதும் அதை டிஜிசிஏ டிஜிட்டல் வான இயங்கு
தளத்தில் பதிவு செய்துகொள்வது அவசியமாகும். இந்த தளம்
மூலமாகவே ட்ரோனை இயக்குவதற்கும் அனுமதி பெற்றுக்கொள்ள
வேண்டும். இதற்கான அப்ளிகேஷனை செல்போனில் பதிவிறக்கம்
செய்துகொள்ள வேண்டும்.

18 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு பயின்ற எவரும் ட்ரோன்களை
இயக்கலாம். ஆங்கில மொழியறிவு அவசியமாகும்.

தற்போது 100 மாவட்டங்களுள் கிராமப் பஞ்சாயத்து அளவிலான
விவசாயப் பகுதிகளுள் ட்ரோன்களைப் பயன்படுத்த வேளாண்
அமைச்சகத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது- ஓராண்டுக்கு இந்த
அனுமதி செல்லுபடியாகும். உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதிபெற்று
சூரிய உதயம் தொடங்கி சூரிய மறைவுக்குள் ட்ரோன்களை இயக்க
வேண்டும். 200 அடி உயரத்துக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.