Saturday, April 19, 2025

காட்டுத்தீயாய் பரவும் ‘வீடியோ’  ‘ருதுராஜ்’ விஷயத்தில் என்ன நடந்தது?

IPL தொடரில் அதிகம் கேப்டனை மாற்றாத ஒரே அணி என்ற பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு உண்டு. பஞ்சாப் போன்ற அணிகள் வருடத்திற்கு ஒருமுறை கேப்டனை மாற்றியபோது, 41 வயதிலும் கூட தோனியை கேப்டன் பதவியில்  சென்னை கீழிறக்கவில்லை.

32 வயதில் கோலியும், 35 வயதில் ரோஹித்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டனர். ஆனால் 43 வயதிலும் சென்னை தோனியை கேப்டனாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த 2024ம் ஆண்டு மிகவும் சுமூகமாக, ருதுராஜ் கெய்க்வாட் தான் எங்களின் அடுத்த கேப்டன், என்று CSK அறிவித்தது.

அவரின் தலைமையின் கீழ் சென்னை பிளே ஆப்க்கு செல்லவில்லை. அதோடு வரலாற்றில் முதன்முறையாக 4  போட்டிகளில் தோல்வியை சந்தித்து, வெறும் வாயை மென்று கொண்டிருந்த எதிரணி ரசிகர்களுக்கு, அவலை மெல்லக் கொடுத்துள்ளது.

இதையெல்லாம் பார்த்து கடுப்பான அணி நிர்வாகம், ”இப்படியே போனா நம்ம அஞ்சு கப்பு பெருமை என்னத்துக்கு ஆகுறது” என்று தீவிரமாக யோசித்து, தோனி மீண்டும் கேப்டனாக வருகிறார் என அறிவித்து விட்டது.

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ருதுராஜ் தொடரில் இருந்தே வெளியேறும் அளவுக்கு என்ன நடந்தது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் காயத்தால் விலகியதாக கூறப்படும் ருதுராஜ் கால்பந்தாட்டம் விளையாடும் காட்சிகள், சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

இதைப்பார்த்த ரசிகர்கள், ”மனுஷன் நல்லாத்தானே இருக்காரு.. அப்புறம் எதுக்கு அவரை தொடர்ல இருந்தே வெளிய அனுப்புனீங்க?” என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர். மற்றொரு தரப்பு ரசிகர்களோ, ”அவருக்கு முழங்கைல தான் காயம். கால் நல்லாத்தான் இருக்கு. அதன் Football ஆடுறாரு,” என்று சென்னைக்கு முட்டுக் கொடுக்கின்றனர்.

என்றாலும் பொதுவான ரசிகர்கள், ”வளர்ந்து வரும் வீரருக்கு கேப்டன் பதவியைக் கொடுத்து அழகுபார்த்துவிட்டு, இப்போது ஒருசில போட்டிகள் சொதப்பியதற்காக அவரின் பதவியை பறித்தது சரியில்லை. இது ருதுராஜின் தன்னம்பிக்கையை அழிக்கும் செயல், சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி செய்திருக்க கூடாது,” என்று CSKவிற்கு அட்வைஸ் செய்துள்ளனர்.

ருதுராஜை கேப்டன் பதவியில் இருந்து கீழிறக்கியது பிரச்சினை இல்லை. மொத்த தொடரில் இருந்தும் அவரை வெளியேற்றியது தான் சர்ச்சையாகி உள்ளது. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இனி சென்னையில் ருதுராஜுக்கு இடமில்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

Latest news