இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்த ஒரு அரசியல் முறையிலான உறவுகளும் இல்லை என்ற போதிலும் கடந்த சில நாட்களாக இரண்டு நாடுகளுக்கும் இடையே மீண்டும் வார்த்தைப் போர் மூண்டிருப்பதால் உலக அரங்கில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் மீது குண்டு வீசப் போவதாக எச்சரிப்பதை தொடர்ந்து ஈரானும் அமெரிக்காவோடு இனி எந்த நேரடிப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று திட்டவட்டமாக கூறி இருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
சமீபத்தில் ஈரான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பு நிறுவனமான IRNA, ஓமன் நாட்டின் மூலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடிதத்துக்கு பதில் அனுப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. முன்னதாக புதிய அணு ஒப்பந்தத்திற்கு ஈரான் விரைவில் சம்மதிக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தங்கள் மீது அதிகபட்ச அழுத்தம் தரும் கொள்கையை கடைபிடிக்கும் வரை அதனுடன் பேச்சுவார்த்தை என்பது சாத்தியமில்லை என்று ஈரான் தெள்ளத்தெளிவாக தெரிவித்திருக்கிறது.
அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுடன் விரைவாக ஒரு உடன்படிக்கையை எட்டவில்லை என்றால் ஈரான் மீது குண்டு வீசப் போவதாகவும் அதன் மீது அதிக வரிகள் விதிக்கப் போவதாகவும் ஞாயிற்றுக்கிழமை பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை டிரம்ப் விடுத்துள்ளனர்.
ஆனால் கடந்த வாரமே வாஷிங்கடனுடன் நேரடிப் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள ஈரான் மறுத்து விட்ட நிலையில் அமெரிக்க செய்தித் தொலைக்காட்சிகளுள் ஒன்றான NBC நியூஸ் உடனான தொலைபேசி நேர்காணலில் ஈரானை பற்றி டிரம்ப் பேசியபோது, ”அவர்கள் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் கண்டிப்பாக வெடிகுண்டு வீசப்படும். இதற்கு முன் அவர்கள் கண்டிராத வகையான தாக்குதலாக அது இருக்கும்” என்று எச்சரித்துள்ளார். மேலும் அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகள் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.