ஈரான் போரால் ஆயுதம் காலி!! ஐரோப்பாவை கைவிட்ட ‘அமெரிக்கா’! குஷியில் ‘ரஷ்யா’!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் தீவிரமான போர், இப்போது அந்த நாட்டின் ராணுவ பலத்தையே சோதிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏற்கனவே ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் காசா போருக்காகத் தனது ஆயுதக் கிடங்குகளைக் காலி செய்திருந்த அமெரிக்கா, தற்போது ஈரான் போரால் மேலும் கடுமையான ஆயுதப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. இதன் விளைவாக, ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு வழங்க வேண்டிய அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களின் விநியோகத்தை அமெரிக்கா ரகசியமாக நிறுத்தி வைத்துள்ளது.

இது குறித்த ரகசியத் தகவலை அமெரிக்க அதிகாரிகள் தங்களின் ஐரோப்பியப் பிரதிநிதிகளிடம் பகிர்ந்துள்ள நிலையில், இந்தச் செய்தி சர்வதேச அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் எல்லையை ஒட்டியுள்ள பால்டிக் மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகள் இந்த விநியோகத் தாமதத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அமெரிக்காவின் ‘பாரின் மிலிட்டரி சேல்ஸ்’ (FMS) திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான டாலர்களைக் கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்தும், தேவையான ஏவுகணைகளும் வெடிபொருட்களும் வந்து சேராதது அந்த நாடுகளைப் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்குத் தாங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று ஒருபுறம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்குத் தேவையான ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்கா கைவிரித்துள்ளது ஐரோப்பியத் தலைநகரங்களில் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த ஈரான் போரில், ஈரான் தரப்பிலிருந்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகளும் ட்ரோன்களும் ஏவப்பட்டுள்ளன. அவற்றைத் தடுத்து அழிக்க அமெரிக்கா தனது பிஏசி-3 பேட்ரியாட் (PAC-3 Patriot) போன்ற அதிநவீன இடைமறிப்பு ஏவுகணைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு வேகமாகத் தீர்ந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் போதுமான உதவிகளைச் செய்யவில்லை என்று வாஷிங்டன் குற்றம் சாட்டுகிறது. இந்த பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் நேட்டோ (NATO) நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. தனது ராணுவத் தேவைகளுக்காக நட்பு நாடுகளைப் புறக்கணிக்கும் அமெரிக்காவின் இந்த முடிவு, ஐரோப்பிய நாடுகளைத் தங்களின் சொந்த ஆயுதத் தயாரிப்பில் கவனம் செலுத்தத் தூண்டியுள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருக்கும் பால்டிக் நாடுகளுக்கு, இந்த விநியோகத் தாமதம் மிகப்பெரிய ஆபத்தாகக் கருதப்படுகிறது.

ஈரான் போர் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதும், அமெரிக்கா எப்போது மீண்டும் தனது ஏற்றுமதியைத் தொடங்கும் என்பதும் மர்மமாகவே உள்ளது. போர் முனையிலும் சர்வதேச உறவுகளிலும் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News