Wednesday, April 30, 2025

‘ஒரு போதும் மண்டியிட மாட்டோம்’! அமெரிக்காவிற்கு மிரட்டல் விடுத்த ‘சீனா’!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் 100 நாட்களை கடந்த நிலையில், உலகமே கவனித்த ஒரு நிகழ்வு நடந்தது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, டிரம்ப் நிர்வாகம் 145 சதவீதம் வரை வரி விதித்துள்ளது தான் அது. இது போன்ற வரிகள் ஏற்கனவே அமலிலிருந்தாலும், தற்போது புதிய வரிகள் சேர்க்கப்பட்டு சில பொருட்களுக்கு மொத்தமாக 245 சதவீத வரி விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த சீனா, மிகவும் வலிமையான ஒரு வீடியோவை வெளியிட்டு, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தது. “ஒருபோதும் மண்டியிட மாட்டோம்” என்பதே அந்த வீடியோவின் கரு. சீனா, அமெரிக்காவை “கொடுமை செய்வதற்கான விளையாட்டு” நடத்துவதாக குற்றம் சாட்டியது. “ஒரு கொடுமைக்காரனுக்கு அடிபணிவது, தாகம் தீர்க்க விஷம் குடிப்பதைப் போல” என்று கூறி, வலிமையான வார்த்தைகளால் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த வீடியோவில், சீனா அமெரிக்காவின் வரலாற்றைப் பின்னோக்கி பார்வையிட்டு, ஜப்பான் மீது அழுத்தம் கொடுத்து “பிளாசா ஒப்பந்தத்தில்” கையெழுத்து வாங்கியதை குறிப்பிட்டது. இதன் விளைவாக ஜப்பானின் பொருளாதாரம் பல வருடங்கள் வளர்ச்சி இழந்தது என்றும் கூறியது. அத்துடன், பிரான்சின் ஆல்ஸ்டம் நிறுவனத்தை அமெரிக்கா நசுக்கியதையும் எடுத்துரைத்தது.

“சமரசம் அமைதியைக் கொண்டுவராது; மண்டியிடுவது மேலும் அடிமைத்தனத்தை உருவாக்கும்” என்று அந்த வீடியோ கூறுகிறது. சீனா தன்னை ஒரு சுதந்திரமான வர்த்தக நாடாக காட்டி, உலக நாடுகளை ஒன்றிணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. “அமெரிக்கா இப்போது ஒரு சிறிய சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கும் படகு மட்டுமே” என்றும் அந்த செய்தி கூறுகிறது.

இந்த செய்தி, சர்வதேசத்தை அதிர வைத்துள்ளது எனலாம். காரணம் வர்த்தக போர் என்றால், சீனா அஞ்சாது… அது கடைசி வரை போராடும் என்று அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest news