Wednesday, July 30, 2025

‘விஸ்வகுரு கங்கை கொண்ட சோழனிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’ – திமுக எம்.பி கனிமொழி உரை

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் பெகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது மே 7ஆம் தேதி இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஆகியவை பற்றிய விவாதம் நாடாளுமன்ற மக்களவையில் ஜூலை 28ஆம் தேதி தொடங்கியது.

இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஜூலை 29ஆம் தேதி கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி உரையாற்றினார். அப்போது அவர், “முக்கியமான இந்த விவாதத்தில் உரையாற்றுவதற்காக எனக்கு வாய்ப்பளித்த அவை தலைவருக்கும், எனது கட்சிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவாதத்தின் மீது உள்துறை அமைச்சர் பேசும்போது எதிர்க்கட்சிகளுக்கு தேசப்பற்று இல்லை என்று சத்தமாக குறிப்பிட்டார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நமது படைகளுக்கு ஆதரவாக தேசத்துக்கு உறுதுணையாக இந்தியாவிலேயே முதல் முதலமைச்சராக பேரணி நடத்தியவர் எங்களது தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் இந்த விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தபோது எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் அதில் பங்கேற்று இந்த விஷயத்தில் அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என உறுதி கொடுத்ததை இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

நாங்கள் எப்போதும் இந்த நாட்டுக்காகவே நிற்கிறோம். நாட்டின் ஒற்றுமைக்காகவே நிற்கிறோம். ஆனால் நீங்கள் வரலாற்றை திருத்திக் கொண்டிருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து காங்கிரஸ் நண்பர்களை விட அதிகமாக நேருவைப் பற்றி பேசியது நீங்கள் தான். அதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். உங்களால் தான் தமிழ்நாட்டில் பல இளைஞர்களும் பெரியாரைப் பற்றியும் அம்பேத்கரை பற்றியும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இன்று உலகம் முழுவதிலும் இருக்கும் பல இளைஞர்களும் பண்டித ஜவஹர்லால் நேரு இந்த நாட்டுக்கு என்ன செய்தார் என்பதை தேடிப் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் நீங்கள்தான். நீங்கள் செய்யும் எல்லா தவறுகளுக்கும் நேருதான் காரணம் என்கிறீர்கள். அப்படிப்பட்ட அந்த தலைவரைப் பற்றி மாணவர்களும் இளைஞர்களும் இப்போது மீண்டும் தேடிப் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்காகவே காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறோம்.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு விளக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுக்களில் ஒரு குழுவின் தலைவராக என்னை நியமித்ததற்கு இந்த அரசுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். முதல் முறையாக பாஜக அரசு எதிர்க்கட்சிகள் மீது சிறிது நம்பிக்கை வைத்து, நமது நாட்டின் பிரதிநிதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று இந்த விவகாரம் பற்றி எடுத்துரைப்பதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது. இதற்காக அரசுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

அதே நேரம், இந்த குழுவுக்கு தலைமை தாங்கியதற்காகவோ அதில் இடம்பெற்றதற்காகவோ நாங்கள் பெரிது மகிழ்ச்சி அடையவில்லை. ஏன் இந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டன? இந்திய மக்களை பாதுகாக்க இந்த அரசு தவறிவிட்டது. அதனால்தான் வெளிநாடுகளுக்கு இவ்வாறு விளக்கம் சொல்ல வேண்டி இருக்கிறது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருந்தார்.நீங்கள் மூன்றாவது முறையாக இந்த அரசாங்கத்தை அமைத்திருக்கிறீர்கள். நேற்று கூட உள்துறை அமைச்சர் அளித்த பதிலில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு நாங்கள் தான் ஆட்சியில் இருப்போம் என்று கூறினார்.

ஜனநாயகத்தில் மக்கள் தான் உச்சபட்ச அதிகாரம் பெற்றவர்கள். மக்கள் எங்களை எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்ற தீர்ப்பை அளித்தால் அவர்களுக்கு தலைவணங்கி நாங்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். ஆனால் தேர்தல் ஆணையத்தையும் எஸ் ஐ ஆர் என்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தையும் நம்பி அது இருக்கக் கூடாது. நாங்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க விரும்புகிறோம். இந்த அவையில் தேர்தல் முறைகள் பற்றியும், ஜனநாயகத்தை காப்பது பற்றியும் அடுத்த முக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம்.

சில நாட்களுக்கு முன்பு பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஒவ்வொரு தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பும், உங்களுக்கு தமிழர்கள் மீதும் தமிழ் கலாச்சாரம் மீதும் திடீரென பாசம் ஏற்படும். ஆனால் சில மாதங்களுக்கு முன்புதான் தமிழ் மண்ணின் தொன்மையை எடுத்துக்காட்டுகிற கீழடி ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்க மறுத்தது என்பதை நினைவுபடுத்துகிறேன்.

இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் எழுதத் தொடங்கப்பட வேண்டும் என்று எங்களது முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வருகிறார். தமிழ்நாட்டின் தமிழ் கலாச்சாரத்தின் பெருமை பற்றி நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை. பிரதமர் சில நாட்களுக்கு முன்பு கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்தார். அந்தப் பெயரை மீண்டும் ஒருமுறை சொல்லிப் பாருங்கள், ‘கங்கை’ கொண்ட சோழபுரம். கங்கையை கொண்டவன் அவன், அதாவது கங்கையை வென்றவன் அவன். தமிழன் கங்கையை வெல்லுவான். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விசுவ குரு என்று சொல்லிக் கொள்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல எப்போதுமே உங்களை விசுவ குரு என்று நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள்.

ஜெய்ப்பூரில் பயங்கரவாத தாக்குதலில் 33 பக்தர்கள் காயம் அடைந்து 9 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஸ்ரீ நகரில் தாக்குதல்கள் நடைபெற்றன. ஏப்ரல் மாதம் பெகல்காமில் தாக்குதல் நடந்தது.காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் 240 கிலோ ஆர் டி எக்ஸ் வெடி மருந்து பயன்படுத்தப்பட்டது என தகவல்கள் வந்தன. இதுகுறித்து எந்த விடையும் நம்மிடம் இல்லை. ஒவ்வொரு முறை பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போதும், இனிமேல் இதுபோல் நடக்காது என சொல்கிறீர்கள்.

விசுவகுரு என சொல்லிக் கொள்கிறீர்களே, விசுவகுரு என்ன பாடத்தை கற்றுக் கொண்டார்? விசுவ குரு யாருக்கும் எந்த பாடத்தையும் கற்றுக் கொடுக்கவில்லை. அது சரி, விசுவகுரு என்ன பாடத்தை கற்றுக் கொண்டார்? நீங்கள் பணிவை கூட கற்றுக் கொள்ளவில்லை. 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்த போது அப்போதைய பிரதமர் நாட்டு மக்களிடம் அதற்காக மன்னிப்பு கேட்டார். இந்த தாக்குதல் நடந்திருக்கக் கூடாது, நாங்கள் இதை தடுத்திருக்க வேண்டும் என்று கூறினார். அவரிடமிருந்து பணிவை கற்றுக் கொள்ளுங்கள்.

பெகல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உங்களிடம் என்ன பதில் இருக்கிறது? அந்த அப்பாவி சுற்றுலா பயணிகள் உங்களை நம்பி நீங்கள் பாதுகாப்பு தருவீர்கள் என்று நம்பி தானே அங்கே சுற்றுலா சென்றார்கள். அது பாதுகாப்பான இடம் என்று நம்பி தானே அங்கே சென்றார்கள்? ஆனால் அவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தார்கள்.

இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களா? அவர்களுக்கு அந்த குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு அளித்து இருக்கிறதா? ஒவ்வொரு முறையும் இதற்கான பொறுப்பை மாநில அரசுகளிடம் சுமத்தி விடுகிறீர்கள். ஒன்றிய அரசு அவர்களுக்காக என்ன செய்திருக்கிறது? ஒன்றுமே இல்லை.

நாங்கள் ஸ்பெயின் சென்ற போழுது அங்கு தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்ட 4000 பேர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வு அமைப்புகளை அவ்வரசு உதவி செய்து ஆதரித்ததை பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது. பயங்கரவாத செயல்களால் உதவி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒன்றிய அரசு ஆதரிக்க வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது. அவர்களுடைய குழந்தைகள், குடும்பத்தினர், தலைமுறை தாண்டியும் இந்த வலியை சுமக்கிறார்கள். பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஒன்றிய அரசு என்ன செய்திருக்கிறது? அவர்களுக்காக செயல்படக்கூடிய தொண்டு நிறுவனங்களையும் அங்கிருந்து பணம் வருகிறது இங்கிருந்து பணம் வருகிறது என்று குற்றம் சாட்டுகிறீர்கள் அவர்களை கைதும் செய்கிறீர்கள்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, காஷ்மீரில் நாங்கள் என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறோம் என்றெல்லாம் அடுக்கினார். நான் கேட்கிறேன், ரா, ஐபி ஆகிய புலனாய்வு அமைப்புகள் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருக்கிறது என எச்சரித்த போதும் சம்பந்தப்பட்ட துறைகள் என்ன செய்து கொண்டிருந்தன? எதுவுமே தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம், பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பெகல்காம் பகுதியின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் பாகிஸ்தானில் இருந்து கேட்கப்பட்டிருக்கின்றன. இதை எப்படி இந்த அரசு தவற விட்டது? நீங்கள் ஆபரேஷன் சிந்துர் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த கேள்விகளுக்கான பதில் என்ன? இது இந்த ஒன்றிய பாஜக அரசின் தோல்வி. மக்களை பாதுகாப்பதில் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது.

நூறாண்டுகளுக்கு முன் என்ன நடந்தது, 50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது, 25 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்றெல்லாம் பேசி, ’பிளேம் கேம்’ ஆடிக் கொண்டிருக்காதீர்கள். இன்று என்ன நடக்கிறது என்பதை பற்றி பேசுங்கள். அரசாங்கம் உங்கள் கைகளில் இருக்கிறது. இந்த நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. ஆனால் நீங்கள் மக்களை பாதுகாக்கவில்லை, ஏன்? ஜம்மு காஷ்மீரை நாங்கள் நிர்வாக ரீதியாக பிரித்தோம் என்கிறீர்கள். ஆனால் அந்த யூனியன் பிரதேச பகுதியின் காவல்துறைக்கான நிதி உதவியில் 464 கோடி குறைத்து விட்டீர்கள். இதுதான் அந்தப் பகுதியை பாதுகாக்கும் லட்சணமா?

கடந்த எட்டு ஆண்டுகளில் நான்காயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் தேவைப்பட்டும் நியமிக்கப்படுவதில் அங்கே தாமதம் காட்டப்படுகிறது. எந்த வகையான பாதுகாப்பு பற்றி நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்? காஷ்மீர் மாநிலம் சுற்றுலாத்துறையை பெருமளவு நம்பி இருக்கிறது. சுற்றுலா துறையில் ஹோட்டல்களில் ரெஸ்டாரண்டுகளில் முதலீடு செய்தவர்கள் மீண்டும் சுற்றுலா பயணிகள் வரவேண்டும் தங்களுடைய வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் இன்றைய நிலவரப்படி காஷ்மீரில் 13 லட்சம் சுற்றுலா முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலா துறையை நம்பி வங்கிகளில் கடன் வாங்கி, வெளியே கடன் வாங்கி முதலீடு செய்தவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு என்ன இழப்பீடு தரப் போகிறீர்கள்? அவர்களைப் பற்றி எப்போதாவது கவலைப்பட்டு இருக்கிறீர்களா? நான் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது. எந்த மாநிலமாக இருக்கட்டும், எந்த மொழியாக இருக்கட்டும், எந்த கட்சியாக இருக்கட்டும். நாங்கள் அனைவரும் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் உங்களோடு இருக்கிறோம். பாதுகாப்பு படைகளோடு நாங்கள் நிற்கிறோம்.

வெளிநாடுகளுக்கு சென்ற அந்த குழுக்களில் இஸ்லாமியர்கள் இருந்தார்கள், கிறிஸ்தவர்கள் இருந்தார்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்களும் இருந்தார்கள். ஆனால் அனைவரும் இந்தியாவுக்காக சென்றோம். இந்தியாவுக்காக நின்றோம். சர்வதேச நாடுகள் நம்முடைய நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வதற்காக நாம் சென்றோம். ஆனால் இங்கே இதை வைத்து நீங்கள் பிரித்தாளும் அரசியல் செய்கிறீர்கள். மதப் பாகுபாடு அரசியல் காட்டுகிறீர்கள்.

பாஜக தலைவர்களின் வெறுப்பு பேச்சுகள் 72% அதிகரித்துவிட்டது. உங்களை நோக்கி யாராவது கேள்வி கேட்டால், உங்களை நோக்கி எந்த ஊடகமாவது விமர்சனம் செய்தால் அவர்கள் தேசத்துக்கு எதிரானவர்கள், நக்சல்கள் என சித்தரிக்கிறீர்கள். ஏன் இந்த பிரிவினை அரசியல் செய்கிறீர்கள்? நாங்கள் இந்த தேசம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் ஏன் பிளவுபடுத்துகிறீர்கள்?

ஆபரேஷன் சிந்தூர் பற்றி மீடியாக்களில் விளக்கம் அளித்த கர்னல் சோஃபியா குரேஷி பற்றி உங்களது மத்திய பிரதேச அமைச்சர் தரம் தாழ்ந்து விமர்சித்தார். இன்னொரு பாஜக பிரமுகர் தாக்குதலின் போது பயங்கரவாதிகளை எதிர்த்து யாரும் போராடவில்லை என்கிறார். இவர்களுக்கு எதிராக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? ஒன்றுமில்லை. அவர்களை வாய்வார்த்தையாக கண்டிக்காவாவது செய்தீர்களா? இல்லையே? உங்களது சொந்த அதிகாரி வெளியுறவு அமைச்சக அதிகாரி விக்ரம் மிஸ்ரி கடுமையாக முறையில் வெறுப்புப் பேச்சுக்கு உள்ளாக்கப்பட்டார். நீங்கள் யாராவது இந்த அரசில் யாராவது உங்களது அதிகாரிக்கு ஆதரவாக பேசினீர்களா? இதுபோன்ற செயல்பாடுகளை மக்கள் அரசிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.இது இந்த ஒன்றிய பாஜக அரசின் தோல்வி. மக்களை பாதுகாப்பதில் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது.

ஆபரேஷன் சிந்துவிற்கு முன்பாகட்டும் ஆபரேஷன் சிந்தூருக்கு பின்பாகட்டும். நாங்கள் எதிர்க்கட்சிகள் அனைவரும் உங்களோடு சேர்ந்து நின்றோம். இந்திய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று உங்கள் பின்னால் நின்றோம். உங்களுடைய கொள்கையாக இருக்கட்டும், இந்த நாட்டிலே நீங்கள் விதைக்கக்கூடிய விஷ விதைகளாக இருக்கட்டும். அவற்றை வேரறுக்க வேண்டும் என்பதிலே எனக்கு இரு வேறு கருத்துக்கள் இல்லை. ஆனால் இந்த நாடு என்று வரும்போது இந்த நாட்டின் இறையாண்மையை நான் நம்புகிறேன்.

இன்னொரு நாட்டிலே இருக்கக்கூடிய ஒரு தலைவர் குறைந்தபட்சம் 25 முறை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது நான் தான் நான் தான் என்று சொல்கிறார். நாங்கள் அவரை நம்பவில்லை. நாங்கள் உங்களை இந்த அரசை நம்புகிறோம். ஆனால் நீங்கள் எதிர்க்கட்சிகள் மீது வைக்கக்கூடிய கருத்துருவாக்கம் என்ன? நாங்கள் இந்த அரசாங்கத்தை நம்புகிறோம். ஆனால் 25 முறை நான்தான் போறேன் நிறுத்தினேன் என்று சொன்ன அவருக்கு இந்த அரசாங்கம் சொன்ன பதில் என்ன? ஏன் இதை எதிர்கொள்வதற்கு இந்த அரசு மவுனம் சாதித்தது? இதுதான் உங்கள் வெளியுறவு கொள்கையா?

நமது பிரதமர் இந்த உலகத்திலே இருக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் நேரடியாக சென்று வருகிறார். இப்போது நாடாளுமன்றம் நடக்கும் நேரத்தில் கூட அவர் இங்கு இல்லை. ஏற்கனவே வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்தவரை இப்போது நாம் வெளியுறவு துறை அமைச்சராக பெற்று இருக்கிறோம். அமைச்சர் அருமையாக பேசுகிறார். ஆனால் உலக நாடுகளுடனான ராஜதந்திரத்தில் நாம் சாதித்தது என்ன?

இவ்வளவு நடந்தும் பாகிஸ்தானை இரண்டு நாடுகள் ஆதரிக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் நம்முடைய மண்ணில் செய்யும் பயங்கரவாத செயலை எந்த ஒரு நாடாவது வெளிப்படையாக கண்டித்ததா? இதுதானா உங்களுடைய வெளியுறவு கொள்கை? நீங்கள் எந்த நாட்டையும் நண்பர்களாக வைத்துக் கொள்ளவில்லையா? ஏன் இந்த நிலைமை? இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதல்களை பயங்கரவாத செயல்களை எந்த ஒரு நாடும் வெளிப்படையாக ஏன் கண்டிக்கவில்லை?

நமக்கு அருகில் இருக்கக்கூடிய இலங்கையோடு நீங்கள் மிகவும் அருமையான உறவை பேணி வருகிறீர்கள். உங்களுக்கு வேண்டப்பட்டவருக்காக அங்கே ஒப்பந்தமெல்லாம் செய்திருக்கிறீர்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூட இதுபோன்றெல்லாம் அவர்களுக்கு செய்ய தெரியவில்லை. ஆனால் இன்றும் தமிழ்நாட்டின் மீனவர்கள் ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள் கைது செய்யப்படுகிறார்கள். மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால் இந்த அரசாங்கத்தின் அலுவலகங்கள் உங்களுடைய நண்பர்களின் நலனுக்காக செயல்படுகின்றனவே தவிர, நாட்டு மக்களின் நன்மைக்காக செயல்படவில்லை. இது உங்கள் ராஜதந்திரத்தின் தோல்வி இல்லையா?

இங்கே யாரும் போரை விரும்பவில்லை. போர் என்பது மனிதருக்கும் மனித இனத்துக்கும் எதிரான ஒன்று. போரை நாம் விரும்பவில்லை என்பதற்காக, நாம் எதற்கும் தயாராக இருக்கக் கூடாது என்று அல்ல. இந்த அரசாங்கத்தில் இருக்கும் பாதுகாப்பு துறை அதிகாரிகளே நாம் இன்னமும் நம்மை மேம்படுத்தி கொள்ள வேண்டி உள்ளது என்று கூறுகிறார்கள். நாடாளுமன்ற நிலைக்குழு பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு மூன்று சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் இரண்டு சதவீதம் கூட அதிகரிக்கப்படவில்லை. இப்போது ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நாம் அதற்கு தயாராக இருக்கிறோமா?

நமது போர் பாகிஸ்தானுடன் ஆனது என்பது மட்டுமல்ல. அதையும் தாண்டியது. ஒரு மிகப்பெரிய நாடு அவர்களை வைத்து நம் மீது நிழல் யுத்தம் நடத்துகிறது. அதை எதிர்கொள்ள நாம் உண்மையிலேயே தயாராக இருக்கிறோமா? நமது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், நமது பகைவர்களை புரிந்து கொள்ள வேண்டும், எதற்கும் தயாராக இருக்க வேண்டும். விசுவ குரு தன் மக்களை பாதுகாப்பதில் தோல்வி அடைந்து விட்டார். விசுவ குரு எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. விசுவகுரு எந்தப் பாடத்தையும் நடத்தவில்லை.

இந்த அரசாங்கமே ஒரு எக்ஸ்டென்ஷன் அரசாங்கமாகத்தான் செயல்படுகிறது. ரா, ஐ பி, அமலாக்கத்துறை என ஒவ்வொரு முக்கியமான துறையின் உயரதிகாரிகளும் பதவி நீட்டிப்பிலேயே இருக்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? இதன் தேவை என்ன? அவர்களுக்கு அடுத்த நிலையிலே இருக்கக்கூடிய அதிகாரிகள் அந்த உயர் நிலைக்கு வருவதை அரசாங்கம் விரும்பவில்லையா? உங்கள் சொந்த அதிகாரிகளையே நீங்கள் நம்பவில்லையா? நான் உலகத் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.வீரம் என்பது இரத்தத்தில் நனைந்த வெற்றி வாள் அல்ல, ஆனால் அது ஒருபோதும் அழைக்கப்படாத போர்க் களத்தின் அமைதியில் உள்ளது.

உறுதியான தலைவர் என்றால், மற்றவர்களுடன் சண்டையிட்டு வெல்பவர் அல்ல. எவர் ஒருவர் வந்ததும் போரற்ற அமைதி தொடங்குகிறதோ அவர்தான் தலைவர்.அப்படிப்பட்ட ஒரு தலைவராக, அரசனாகத்தான் கங்கை கொண்ட சோழன் இருந்தான். வந்தீர்கள், பாடம் கற்றுக் கொண்டு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.நன்றி” என்று கனிமொழி கருணாநிதி தனது உரையை நிறைவு செய்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News