Tuesday, February 17, 2026

‘உலகமே கேட்கும்படி கத்த வேண்டும்!’ – ஒரு காசா அம்மாவின் கதறல் குரல்! என்ன நடந்தது காஸாவில்?

சமீப நாட்களாக காசாவில் நடத்தப்படும் தாக்குதலின் காரணமாக, அந்நாட்டில் உணவுப் பஞ்சம் எந்தளவுக்குக் கடுமையாக இருக்கிறது என்பதை பல வீடியோக்கள் உலகுக்கு கசிய விட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இதனால், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு கருச்சிதைவுகள், குழந்தை இறந்தே பிறப்பது மற்றும் பிறவியிலேயே ஊனமாக குழந்தைகள் பிறத்தல் ஆகியவை காஸாவில் அண்மையில் அதிகரித்துள்ளது. ‘காசாவில் நிலவுகிற உணவுப்பஞ்சம் காரணமாக, அங்கு பிறக்கின்ற பச்சிளம் குழந்தைகளில் பத்தில் ஒரு குழந்தை எடைக்குறைவாக உள்ளது அல்லது குறைபிரசவத்தில் பிறக்கிறது’ என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஹமாஸுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மார்ச் 2ம் தேதி முதல் காசாவை இஸ்ரேல் முற்றுகையிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, அது சற்றே தளர்த்தப்பட்டிருந்தாலும் வலி நிவாரணிகள் உள்ளிட்ட அடிப்படை மருத்துவப் பொருட்கள் இன்னும் காசாவில் போதுமான அளவுக்கு இல்லை.

இந்நிலையில் காசாவைச் சேர்ந்த ஏழு மாத கர்ப்பிணி ஒருவர், ‘இஸ்ரேலிய குண்டுவெடிப்பு மற்றும் வெளியேற்ற உத்தரவுகளால் நான் என் குழந்தையை இழக்கும் நிலையில் இருக்கிறேன். எனக்கு எந்த நேரத்திலும் குறைப்பிரசவம் ஏற்படலாம்’’ என தன் அச்சம் மற்றும் மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தன் பச்சிளம் குழந்தையை பறிகொடுத்த தாய் ஒருவர், ‘என் மகளை மரணத்திலிருந்து காப்பாற்று என இறைவனை வேண்டினேன். ஆனாலும் அவளை இழந்துவிட்டேன். அப்போது, இந்த உலகமே கேட்கும்படி கத்த வேண்டும் என்று நினைத்தேன்’ என்று கூறியிருப்பது இதயங்களை கணக்க செய்வதாக இருக்கிறது.

இந்நிலையில் காஸாவுக்கு செல்ல வேண்டிய அத்தியாவசிய பொருட்களை தீவிரவாத அமைப்புகளே தடுத்து நிறுத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது.

Related News

Latest News