இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீபத்தில் மூண்ட போர் கடந்த மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு தற்போது பாகிஸ்தானின் விரோதப்போக்கு காரணமாக நேற்று இரவு ஜம்மு காஷ்மீரில் இருநாடுகளின் எல்லையில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தீவிர துப்பாக்கிச்சண்டை நடந்திருக்கிறது. இதில் இந்திய நாட்டின் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைத்தார். இந்நிலையில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாட்டின் சார்பில் ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. அதில் பொறிகலங்கிப்போன பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்து வெள்ளை கொடி காட்டியது.
இந்த சூழலில் நேற்று இரவு ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே வழக்கம்போல் நம் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் எல்லையை கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றிருக்கிறார். இது வழக்கமான ஊடுருவல் முயற்சியை போல் இல்லாமல் வழக்கத்துக்கு மாறாக இருந்தது.
ஊடுருவ முயன்ற நபரை நம் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் நம் வீரர்களும் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இந்திய வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதற்கிடையே இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நபர் மீண்டும் பாகிஸ்தானுக்கே விரட்டியடிக்கப்பட்டார்.
இந்த மோதலை தொடர்ந்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர் மரணடைந்தார். இதனால் தற்போது இருநாடுகள் இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகியிருப்பது உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.