மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்த பலரிடையே, ‘எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை’ என்ற ஏமாற்றக் குரல் அடிக்கடி கேட்கப்படுகிறது. ‘கடந்த காலத்தில் அதிக லாபம் தந்த திட்டங்களைத் தேர்ந்தெடுத்தோம். ஆனாலும், எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை’ என்பதே அவர்களின் பொதுவான குறைபாடு.
நிபுணர்கள் கூறுவதாவது, ‘முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு திட்டத் தேர்வு காரணமாக இருப்பது 30% அளவுக்கே. மீதமுள்ள 70% வெற்றியும் தோல்வியும் முதலீட்டாளரின் நடத்தையும் அதாவது Investment Behaviour கட்டுப்பாடுமே தீர்மானிக்கிறது. அதாவது, முதலீட்டு ஒழுங்கு, சந்தை அதிர்வுகளை சமாளிக்கும் மனநிலை, போன்றவையே முக்கிய பங்காற்றுகின்றன.
பொதுவாக, முதலீடு செய்வதற்கு முன்பு பலர் ஆராய்ச்சிகள் செய்து, முன்னர் அதிக லாபம் அளித்த திட்டங்களில்தான் பணம் செலுத்துகின்றனர். அதனால் தாங்கள் சரியான போர்ட்ஃபோலியோவைக் கொண்டதாக நம்புகின்றனர். ஆனால், சந்தையில் ஏற்படும் சரிவுகள் வந்தவுடன் பல முதலீட்டாளர்கள் பதற்றமடைந்து தவறான முடிவுகளை எடுப்பது வழக்கமாகியுள்ளது.
சந்தை சரிவின்போது பங்குகளை விற்றுவிடுதல், முதலீட்டை இடைநிறுத்துதல், அல்லது அடிக்கடி திட்டங்களை மாற்றுதல் போன்ற செயல்கள்தான் எதிர்பார்த்த லாபத்தை தராமல் போக முக்கிய காரணங்களாகும். எனவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் திட்டத் தேர்வை விட முதலீட்டாளரின் மனநிலை மற்றும் சீரான பழக்கங்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது ஒரு செய்தி மட்டுமே. உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ற முதலீடு பற்றிய தனிப்பட்ட ஆலோசனைக்கு, அத்துறையின் நிபுணர்களை அணுகுவது சிறந்தது.