திரைப்பட நடிகர் சத்யராஜ் தற்போது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரது பிரச்சாரங்களில், அவர் தொடர்ந்து பல்வேறு அரசியல் கருத்துகளை முன்வைத்து, குறிப்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது விமர்சனங்களை பதிவு செய்து வருவது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 21ஆம் தேதியுடன் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ளன. இதனால் அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக திமுகவுக்கு ஆதரவாக பல திரைத்துறை பிரபலங்கள் களமிறங்கியுள்ள நிலையில், சத்யராஜ் கடந்த சில நாட்களாக ராயபுரம், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திவிக நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
தொடர்ந்து மாதவரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி, பூவிருந்தமல்லி, மதுரவாயல் போன்ற பகுதிகளிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதற்கிடையில், சத்யராஜின் குடும்பத்திலேயே அரசியல் ஆதரவில் வேறுபாடு வெளிப்பட்டுள்ளது. அவரது மகள் திவ்யா சத்யராஜ் திமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். ஆனால் அவரது மகன் சிபி சத்யராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் டாக்டர் குமார் ஆர் அவர்களுக்கு ஆதரவாக சிபி சத்யராஜ் வெளியிட்ட வீடியோவில், மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள் விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் அரசியல் மற்றும் திரைத்துறையில் இந்த குடும்பத்தின் நிலைப்பாடு குறித்து பரவலான பேசுபொருள் உருவாகியுள்ளது.
