இலங்கைக்கு பறந்த விருதுநகர் சம்பா மிளகாய்; முதல் ஏற்றுமதியை தொடங்கி வைத்த நிர்மலா….

புவிசார் குறியீடு (GI) பெற்ற விருதுநகர் சம்பா மிளகாய் மற்றும் அதன் மதிப்புக்கூட்டு பொருட்கள் முதல்முறையாக இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதனுடன் ஆந்திரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட இந்திய மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலமும் சந்தைப்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளதால், விருதுநகர் சம்பா மிளகாய் உலகளாவிய சந்தையை நோக்கி முன்னேறியுள்ளது.

இந்த முதல் ஏற்றுமதியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகரில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியான SIDBI-யின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட விற்பனை தளத்தின் மூலம் முதல் ஆர்டர்கள் இலங்கை, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவுக்கு அனுப்பப்பட்டன. இதனுடன், சம்பா மிளகாய்க்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட Farmers Producer Organisation (FPO) அமைப்பையும் அவர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், இந்த FPO உருவாக்கியுள்ள சம்பா மிளகாய் மற்றும் அதன் மதிப்புக்கூட்டு பொருட்கள் இந்தியாவின் வேளாண் வர்த்தகத்திற்கு முன்னுதாரணமாக அமையும் என்றார். விவசாயிகளுக்கு உற்பத்தி, பதப்படுத்தல், மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்தல், சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி வரை முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒரே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து முதலீடு, உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்த உருவாக்கப்படும் அமைப்பே FPO ஆகும். SIDBI வழங்கும் நிதியுதவியின் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு, பதப்படுத்தும் கட்டமைப்புகள் மற்றும் சர்வதேச சந்தையை அடையும் வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பா மிளகாய் சாகுபடி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஏற்றுமதிக்கான தரத்தை உறுதிப்படுத்த, பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார். அண்மையில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி எச்சங்கள் கண்டறியப்பட்டதால் இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான், சீனா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்ததை சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற பிரச்சினைகள் சம்பா மிளகாய் ஏற்றுமதியில் ஏற்படாத வகையில் தரநிலைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related News

Latest News