எரிபொருள் வரி குறைப்பு? தமிழ்நாட்டில் முக்கிய மாற்றம்!!

சென்னையில் விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், விமான எரிபொருள் (ATF) மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) குறைக்க தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாநிலத்தில் ATF மீது 29 சதவீத VAT விதிக்கப்பட்டு வருகிறது. இதை அண்டை மாநிலங்களின் வரி விகிதங்களுக்கு இணையாகக் குறைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டில் பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் ஜிஎஸ்டி (GST) வரி அமைப்பிற்குள் வந்துவிட்ட நிலையில், எரிபொருள் மற்றும் மதுபானம் போன்ற சில பொருட்களுக்கு மட்டுமே மாநில அரசுகள் தனியாக வரி விதித்து வருவாய் ஈட்டி வருகின்றன. அதனால் ATF மீதான வரியை குறைப்பது மாநில வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், விமானத் துறைக்கு இது முக்கிய ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிறுவனங்களின் இயக்கச் செலவில் எரிபொருள் முக்கிய பங்காற்றுவதால், வரி குறைப்பு மூலம் செயல்பாட்டு செலவு குறைந்து, புதிய விமான சேவைகள் தொடங்கவும், பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சேவைகள் வழங்கவும் வாய்ப்பு உருவாகும். இதற்காக மத்திய அரசும் பல மாதங்களாக மாநிலங்களை ATF மீதான வரியை குறைக்க வலியுறுத்தி வந்தது.

சமீபத்தில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசுகள் ATF மீதான VAT-ஐ முறையே 18 மற்றும் 28 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைத்துள்ளன. தென்னிந்திய மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் 1 சதவீதம், புதுச்சேரி 14.5 சதவீதம், தெலங்கானா 16 சதவீதம், கர்நாடகா 18 சதவீதம் வசூலிக்கின்றன. கேரளாவில் 5 சதவீத விற்பனை வரியுடன் 1 சதவீத செஸ் விதிக்கப்படுகிறது. தமிழ்நாடும் இதேபோன்ற வரிக் குறைப்பை மேற்கொண்டால், மாநிலத்தின் விமானப் போக்குவரத்து வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். அதே நேரத்தில், இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை அரசு எவ்வாறு சமாளிக்கும் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

Related News

Latest News