தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி 2 மாநில மாநாடுகளை நடத்தியிருக்கும் விஜய், முதல்முறையாக மக்களை சந்திக்கும் தோ்தல் பிரசார பயணத்தை திருச்சியில் தொடங்கவிருப்பதை முன்னிட்டு திருச்சி மாநகரம் முழுவதும் விஜய் தொண்டர்களால் சூழப்பட்டுள்ளது.
தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து இன்று தொடங்கவிருக்கிறது. சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அவருக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனத்தில் மரக்கடைப் பகுதிக்குப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
விஜய்யின் வாகனத்தை தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கார், பைக்குகள் மூலம் அவரைத் தொடர்ந்து வருகின்றனர். இதனால் திருச்சியில் முக்கிய பகுதியான டிவிஎஸ் டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
