கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பேரழிவாக மாறி, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது தமிழக அரசியல் வரலாற்றிலேயே கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. நடிகரும், அரசியல்வாதியுமான விஜயின் முதல் அரசியல் Rally-யிலேயே இத்தகைய சோகம் நிகழ்ந்திருப்பது, அவரின் அரசியல் வாழ்க்கை துவக்கத்திலேயே அஸ்தமிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த நிகழ்வுக்கு விஜய் எந்த அளவு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதே இப்போது விவாதப் பொருள். ஒருபுறம், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடுமையான அலட்சியம் காட்டியிருப்பது தெளிவாக தெரிகிறது.
மறுபுறம், ஒரு தலைவராக விஜய், தனது ஆதரவாளர்களின் உயிர் பாதுகாப்பே முதன்மை என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அவர்மீது இருந்தது. மக்களை ஆபத்துக்கு தள்ளிய சூழலை முன்னதாகவே கணித்து கட்டுப்படுத்தியிருக்கலாம் என்பதும் நிபுணர்களின் கருத்து.
விஜய் தனது பேச்சுகளில் மாற்று அரசியல், சுத்தமான ஆட்சி குறித்து வலியுறுத்தி வந்தார். ஆனால் நடைமுறையில் நிகழ்ந்த விபத்து, அவரின் வாக்குறுதிகளுக்கும் நிஜத்திற்கும் இடையே பெரிய இடைவெளியை காட்டுகிறது. இந்த பேரழிவை தடுக்க கடுமையான பாதுகாப்பு திட்டங்கள், போலீஸ் ஒருங்கிணைப்பு, கூட்ட நிர்வாகம் ஆகியவை இருந்திருந்தால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
இப்போது மக்கள் மனதில் எழும் கேள்வி ஒன்றே. அது, ‘விஜயின் அரசியல் துவக்கமே இவ்வாறு சோகத்தில் தொடங்கியுள்ள நிலையில், அவர் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியுமா?’ என்பது தான். இதற்கு காலம் தான் விடை சொல்ல வேண்டும்.