நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள விஜய்யின் இறுதிப் படம் என்பதால், ரசிகர்கள் வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு கூட திரையரங்குகளுக்கு திரண்டனர்.
முதல் காட்சி முதல் இறுதிவரை ரசிகர்களின் ஆரவாரம் திரையரங்குகளை அதிர வைத்தது. படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், வெற்றியின் மகிழ்ச்சியுடனும், விஜய்யை இனி திரையில் காண முடியாது என்ற சோகத்துடனும் உணர்ச்சிபூர்வமாகப் பேசியனர்.
படம் இணையத்தில் முன்கூட்டியே கசிந்திருந்த போதிலும், அதனால் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் மக்கள் திரளாக திரையரங்குகளுக்கு வந்துள்ளனர். எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
முதல் நாளில் உலகளவில் ரூ.80 கோடி வசூலித்த இப்படம், இரண்டாம் நாளில் இந்தியாவில் ரூ.21.15 கோடியும், வெளிநாடுகளில் சுமார் ரூ.10 கோடியும் வசூலித்துள்ளது.
இதன்மூலம் இரண்டு நாட்களில் உலகளவில் மொத்த வசூல் ரூ.112.50 கோடியை எட்டியுள்ளது. வார இறுதி விடுமுறையால் வசூல் மேலும் அதிகரித்து, முதல் வார இறுதிக்குள் ரூ.250 கோடியைத் தாண்டும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
