த.வெ.க தலைவர் விஜய் தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் அவர் முழு நேர அரசியலில் களமிறங்கப்போகிறார் என்பது உறுதியாகி விட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜய். அப்போது அவர் ஒரு முக்கிய அறிவிப்பைத் தந்தார் – தற்போது நடித்து கொண்டிருக்கும் இரண்டு படங்களை முடித்த பின், அரசியலுக்கே முழுமையாக நேரம் ஒதுக்கப்போகிறேன் என்றார்.
அதற்கேற்ப, ஜனநாயகன் திரைப்படம் அவரது கடைசி படமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், பிரகாஷ் ராஜ், பிரியா மணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிக்க, H.வினோத் இயக்கம் செய்தார் . படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி, இப்போது முழுமையாக முடிந்துவிட்டது. பாடல்கள், பேட்ச் வேலைகள் என அனைத்தையும் விஜய் நிறைவு செய்துவிட்டார்.
மேலும் திரைப்படம் நிறைவடைந்ததை ஒட்டி அதில் பணியாற்றிய அனைவருக்கும் த.வெ.க தலைவர் விஜய் சார்பில் விருந்தளிக்கப்பட்டது ….
குறிப்பாக இதுவரை மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வந்த விஜய், இனிமேல் முழு நேர அரசியல் செயல்பாடுகளுக்கு தயாராக இருக்கிறார். கடந்த வாரம் நடந்த கல்வி விருது விழாவிலும், அவர் ஜனநாயகன் படத்தின் அதே தோற்றத்தில் வந்ததால், அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடம் இன்னும் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், விஜய் தனது பிறந்த நாளையொட்டி – இன்னும் இரண்டு வாரங்களில் – தமிழக முழுவதுமாக சுற்றுப்பயணம் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என கூறப்படுகிறது. அத்துடன், அடுத்த கட்ட கட்சிப் பணிகளும் அறிவிக்கப்படலாம்.
இது வெறும் ஒரு படப்பிடிப்பு முடிவல்ல… இது, நடிகர் விஜயிலிருந்து, தலைவராக வளரக்கூடிய ஒரு பயணத்தின் அதிகாரப்பூர்வ துவக்கம் என தொண்டர்கள் கூறி வருகின்றனர்!