அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிரச்சாரங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, பாரபட்சமின்றி அனுமதி வழங்க வேண்டும் என தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொது சொத்துகள் சேதத்துக்கான இழப்பீடு விதிகளை வகுக்க தனி நீதிபதி முன்பே உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, செப்டம்பர் 27ம் தேதி கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் ரோடு ஷோக்களுக்கு ஒருங்கிணைந்த வழிகாட்டு விதிமுறைகள் தேவையென பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், விதிகள் உருவாகும் வரை எந்தக் கட்சிக்கும் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என விளக்கமளித்தார்.
இதற்கு தலைமை நீதிபதி, அரசின் நிலைப்பாடு கட்சிகளின் அடிப்படை உரிமையை பாதிக்கிறதா என கேள்வி எழுப்பினார். தவெக தரப்பில் ராகவாச்சாரி, அனுமதி தாமதமாக வழங்கப்பட்டதே கரூர் விபத்துக்குக் காரணம் என தெரிவித்தார்.
இவ்விரு தரப்புகளின் வாதங்களுக்குப் பிறகு, காவல், தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் ஆலோசனையுடன் 10 நாளில் வழிகாட்டு விதிகளை சமர்ப்பிக்கவும், பொதுக்கூட்ட அனுமதி மனுக்களுக்கு காலவரையிலான தீர்மானம் எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
