சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 13 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ள நிலையில், அதிகபட்சமாக துரைப்பாக்கத்தில் 19.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. சென்ட்ரல், கோயம்பேடு, எழும்பூர், வண்ணாரப்பேட்டை, புரசவைவாக்கம், நுங்கம்பாக்கம், அசோக்பில்லர், பல்லாவரம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் கடந்த 24மணி நேரத்தில் 13 இடங்களில் மிக கனமழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 19.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பள்ளிக்கரணையில் 17.7 சென்டிமீட்டர் மழையும் , மேடவாக்கத்தில் 17 சென்டிமீட்டர் மழையும், பாரிமுனையில் 15.9 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
