அமெரிக்காவின் ஹெச்-1பி விசா நடைமுறையில் பெரும் மாற்றங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் அமலுக்கு வரும் என்று அமெரிக்காவின் வா்த்தகத் துறை அமைச்சர் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்ட உத்தரவின்படி, ஹெச்-1பி விசா கட்டணம் ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அதாவது 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டியதாகும்.
செப்டம்பர் 21-க்கு பிறகு விண்ணப்பிக்கும் அனைவருக்கும், 2026ம் நிதியாண்டு காலத்துக்கான புதிய விண்ணப்பதாரர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். எனினும், அதற்கு முன்பே விண்ணப்பித்தவர்கள், புதுப்பிப்புக்காக விண்ணப்பிப்பவர்கள், மேலும் அமெரிக்காவிற்கு மீண்டும் நுழைய விரும்பும் விசாதாரர்களுக்கு இந்த விதி பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990-களில் அறிமுகமான ஹெச்-1பி விசா, பெரும்பாலும் குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்ட இடங்களை விட ஏழு முதல் பத்து மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இவற்றில் சுமார் 74 சதவீதம் தொழில்நுட்பத் துறையினருக்கு வழங்கப்படுகின்றன. கல்வியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் வெறும் 4 சதவீதம் மட்டுமே பெறுகின்றனர்.
இது குறித்து அமெரிக்க அமைச்சர் லுட்னிக், ‘அமெரிக்காவுக்கு அதிக அளவில் கல்வியாளர்களும் மருத்துவர்களும் வரவேண்டும். ஆனால் நிறுவனங்கள் பொறியாளர்களை பணியமர்த்த விரும்பினால், அதிக சம்பளம் பெறுபவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும். குறைந்த சம்பளம் பெறுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை அமெரிக்கா வரவழைப்பது தவறு’ என வலியுறுத்தியுள்ளார்.