ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்கும் ஒரு பரபரப்பான செய்தி! தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 4000 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொடுவதற்கு மிக அருகில் வந்துவிட்டது. இந்திய ரூபாயில் சொன்னால், சுமார் 3 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்!
சமீபத்திய வர்த்தகத்தில், ஒரு அவுன்ஸ் தங்கம் 3,999.41 டாலர் வரை சென்று, மயிரிழையில் 4000 டாலர் என்ற இலக்கைத் தவறவிட்டது. நியூயார்க் சந்தையில் டிசம்பர் மாதத்திற்கான எதிர்கால ஒப்பந்தங்கள் ஏற்கனவே 4000 டாலரைத் தாண்டி வர்த்தகமாகி புதிய சாதனையை படைத்துவிட்டன.
ஏன் இந்த திடீர் விலையேற்றம்?
முதலாவதாக, அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாக முடக்கம் இரண்டாவது வாரமாக நீடிக்கிறது. இதனால், முக்கியமான பொருளாதாரத் தரவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு, முதலீட்டாளர்களிடையே ஒருவித குழப்பமும், நிச்சயமற்ற தன்மையும் நிலவுகிறது.
இரண்டாவதாக, தொழில்நுட்பப் பங்குகளின் தள்ளாட்டம். ஆரக்கிள் போன்ற நிறுவனங்களின் வருவாய் அறிக்கை, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பங்குகளின் வளர்ச்சி அதன் எல்லையை எட்டிவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாதுகாப்பான புகலிடமான தங்கத்தை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுக்கின்றனர்.
உலக அரங்கிலும் ஜப்பான் மற்றும் பிரான்சில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கின்றன.
இந்த ஆண்டில் மட்டும் தங்கம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக விலை உயர்ந்திருக்கிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களின் வர்த்தக மற்றும் புவிசார் அரசியல் நகர்வுகள், அமெரிக்க டாலரின் வலிமையைக் குறைத்து, தங்கத்தின் மதிப்பை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளது.
இதோட நிற்குமா? என்றால், இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். உலகப் புகழ்பெற்ற கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம், தங்கத்தின் விலை குறித்த தனது கணிப்பை அதிரடியாக உயர்த்தியுள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,900 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.
பொருளாதார ஜாம்பவான்கள் என்ன சொல்கிறார்கள்?
பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் நிறுவனர், கோடீஸ்வரர் ரே டாலியோ, “டாலரை விட தங்கம் நிச்சயமாக ஒரு பாதுகாப்பான புகலிடம்” என்று கூறியுள்ளார். இந்த எழுச்சி, 1970-களில் இருந்த பொருளாதார உறுதியற்ற தன்மையை நினைவுபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிட்டாடல் நிறுவனர் கென் கிரிஃபின், “தங்கத்தின் இந்த உயர்வு, அமெரிக்க நாணயத்தின் மீதான கவலையையே பிரதிபலிக்கிறது” என்கிறார்.
மொத்தத்தில், இது தங்கத்தின் மீதான நம்பிக்கை மட்டுமல்ல, காகித சொத்துக்கள் (Paper Assets) மீதான ஆழ்ந்த அவநம்பிக்கையையும் காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் 3,996 டாலரில், அதாவது சுமார் 3 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது. இந்த 4000 டாலர் என்ற தடையை தங்கம் உடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.