போரால் சிதறும் உக்ரைன் குடும்பங்கள்

456
Advertisement

ஏவுகணைகளை வீசிக்கொண்டே தரைவழியாகவும் உக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல் தொடுத்தும்  வருகின்றன ரஷ்ய படைகள். இதனால் 18 வயது முதல் 60 வயது வரையிலான அனைத்து ஆண்களும், ஆயுதம் ஏந்தி போரிடவேண்டும் என உக்ரைன் அரசு வலியுறுத்தியுள்ளது.

எனவே, கணவனை பிரிந்து பெண்களும் தந்தையை பிரிந்து குழந்தைகளும் கண்ணீருடன் உக்ரைனை விட்டு வெளியேறுகின்றனர். பெண்கள் பலரும் தங்கள் கைக்குழந்தைகளுடன் அடைக்கலம் தேடிச்செல்வது மனதை உருகச்செய்கிறது. மற்றொரு பக்கம் கடும் குளிரும் அவர்களை வாட்டும் நிலையில், ஏவுகணைகளின் வெப்பத்தை விடவா இந்த பனிமழை பெரிய பாதிப்பை தந்துவிடும் என்ற மனவேதனையுடன் எல்லையை கடக்கின்றனர். போலந்து உட்பட அண்டை நாடுகளின் எல்லைகளில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அண்டை நாட்டு மக்களும் உக்ரைன் மக்களுக்கு உணவு அளித்து அடைக்கலம் கொடுத்து வருகின்றனர்.

இதுவரை 4 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. போர் நீடித்தால் 70 லட்சம் உக்ரேனியர்கள் தங்களது நாட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்படும் என ஐரோப்பிய யூனியன் கவலை தெரிவித்துள்ளது. உக்ரைனில் குடும்ப தலைவனை போர்க்களத்தில் விட்டுவிட்டு பெண்கள், குழந்தைகள் கண்ணீருடன் வெளியேறி வருகின்றனர். அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுத்தாலும் எப்போது சொந்த மண்ணுக்கு திரும்புவோம் என்ற ஏக்கத்துடனே  உள்ளனர்.