ஆதார் கார்டு சேவைகள் மேலும் மேம்பட, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய செயலியை உருவாக்கி வருகிறது.
புதிய ஆதார் செயலியின் முக்கிய அம்சம்
அடையாளத்தை காகிதமின்றி பகிரும் வசதி. இதன் மூலம் ஆதார் தொடர்பான அனைத்து விவரங்களையும் அல்லது தேவையான சில தகவல்களையும் மட்டும் பகிர முடியும். மேலும், ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
UIDAI தெரிவித்ததாவது, இந்த செயலியின் நோக்கம் ஆதார் கார்டு நகல்களை பகிரும் பழக்கத்தை குறைத்து, அனைவரும் பாதுகாப்பான ஆஃப்லைன் சரிபார்ப்பை பயன்படுத்த ஊக்குவிப்பதாகும்.
செயலியின் சிறப்பு அம்சங்கள்
ஒரே செயலியில் 5 குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்களைச் சேமிக்கலாம். எந்த தகவலை பகிர வேண்டும் என்பதில் பயனர்களுக்கே முழு கட்டுப்பாடு. ஒரு கிளிக் மூலம் பயோமெட்ரிக் லாக்/அன்லாக் செய்யலாம். மொபைல் எண் மற்றும் முகவரி புதுப்பிக்கவும் வசதி உண்டு.
பாதுகாப்பு அம்சங்கள்
இந்த புதிய தொழில்நுட்பம் ஆஃப்லைன் சரிபார்ப்பை பாதுகாப்பான, எளிமையான மற்றும் ரகசியமான முறையில் செய்ய உதவும்.
UIDAI தற்போது ஆதார் கார்டு வடிவமைப்பிலும் மாற்றங்களை பரிசீலித்து வருகிறது. வருங்காலத்தில் ஆதார் கார்டில் நபரின் புகைப்படம் மற்றும் QR குறியீடு மட்டுமே இருக்கும். மற்ற விவரங்களை தேவையின்படி செயலியின் மூலம் பகிர முடியும்.
உதாரணமாக, வங்கியில் கணக்கு திறக்கும் போது, முழு ஆதார் தகவலை அளிக்க வேண்டியதில்லை. வங்கிக்கு தேவையான தகவல்களையே இந்த செயலியின் மூலம் அனுப்பலாம். இதனால் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
மேலும், பயோமெட்ரிக் தகவலை லாக் செய்து வைத்தால், பயனரின் அனுமதியின்றி யாரும் ஆதார் விவரத்தைப் பயன்படுத்த முடியாது.
புதிய ஆதார் செயலி அறிமுகமானதும், ஆதார் பயன்பாடு மேலும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
