அமைச்சராக பதவியேற்ற திமுகவின் ‘வாரிசு’‌ – உதயநிதியின் அரசியல் பயணம்

242
Advertisement

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பேரன் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகன் என்பது உதயநிதி ஸ்டாலினுக்கு தவிர்க்க முடியாத அடையாளம் ஆகும்.

இந்நிலையில், இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுள்ளது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. விறுவிறுப்பான இவரது அரசியல் வளர்ச்சியை வாரிசு அரசியல் என எதிர்கட்சிகள் காட்டமாக விமர்சித்து வரும் நிலையில், உதயநிதி அவருக்கு கிடைத்துள்ள பதவியை உண்மையான உழைப்பால் உரித்தாக்கி கொண்டார் என திமுகவினர் எடுத்துரைத்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக கடந்து வந்த அரசியல் பயணத்தை இத்தொகுப்பில் காணலாம்.

1977ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி மு.க.‌ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினுக்கு மகனாக‌ பிறந்தார் உதயநிதி ஸ்டாலின். லயோலா கல்லூரியில் படிப்பை முடித்த உதயநிதி, 2006ஆம் ஆண்டு திமுகவின் கழகப் பத்திரிக்கையான முரசொலிக்கு நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, அவ்வப்போது அரசியல் போராட்டங்களில் தலைகாட்ட தொடங்கினார்.

2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக‌ வேட்பாளரும் தன் நண்பருமான அன்பில் மகேஷுக்காக பிரசாரம் செய்தார். அதைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதே ஆண்டில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி, 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் முழு வீச்சில் திட்டமிட்ட பிரசாரப் பணிகளை மேற்கொண்டார். இந்த தேர்தல் சமயத்தில் மத்திய அரசை விமர்சிக்க அவர் பிரசாரக் களத்தில் பயன்படுத்திய ‘எய்ம்ஸ் செங்கல்’ நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது. இதே தேர்தலில், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

இந்த வெற்றியை தொடர்ந்து, கட்சியிலும் இளைஞரணி பதவி மீண்டும் அவருக்கே வழங்கப்பட்டது. இவ்வாறாக, உதயநிதி முழுமையாக அரசியல் களத்தில் இறங்கி விட்ட நிலையில் கட்சியில் அன்பில் மகேஷ், திண்டுக்கல் ஐ.பெரியசாமி போன்ற அவரின் அபிமானிகள் விரைவில் அவர் அமைச்சராக வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

கட்சி நிர்வாகிகளின் கோரிக்கை வலுத்து கொண்டே சென்றதை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் உதயநிதியை அமைச்சராக்க ஆளுநரிடம் பரிந்துரைத்தார். இப்பரிந்துரையை ஆளுநர் ஏற்றதன் அடிப்படையில் இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

1960ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமர்ந்தது முதலே கட்சி பணிகளுக்கு பரிச்சயப்பட்ட ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினர், மேயர், உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதலமைச்சர், கட்சியின் தலைவர் என‌ படிப்படியாக பொறுப்புகளையும் பதவியையும் பெற்று 2021ஆம் ஆண்டில் தான் முதலமைச்சர் ஆனார்.

ஆனால் 2018ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம்‌ஆண்டிற்குள்ளாக மட்டுமே உதயநிதியின் அரசியல் வளர்ச்சி அதிவேகமாக நிகழ்ந்து, இன்று அமைச்சர் பதவி வரை சாத்தியப்பட்டுள்ளது.

இதனால், உதயநிதியை ‘காத்திருந்த இளவரசர்’ , ‘தவிர்க்க முடியாத வாரிசு’ என ஒரு சாரார் விமர்சிக்க, வாரிசு என்பதாலேயே பதவி வழங்குவது தவறு என்றால், வாரிசு என்ற ஒற்றை காரணத்திற்காக ஒருவரின் அரசியல் ஆளுமையை குறைத்து எடை போடுவதும் கூட பகுத்தறிவு குன்றிய செயலாகத் தான் இருக்க முடியும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.