Wednesday, December 17, 2025

செங்கல்பட்டில் செல்போன் திருடிய 2 வாலிபர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் செல்போன் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (49). இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 7ம்தேதி மாலை நெல்லிக்குப்பம் சாலையில் தனியாக நடந்து சென்றபோது, பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள், திடீரென அவரிடமிருந்த செல்போனை பறித்துகொண்டு தப்பினர்.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணன், கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி ஆசாமிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, சிறுகுன்றம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (21), கொட்டமேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் இருவரும் கூட்டாக கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டாரபகுதியில் தொடர்ந்து செல்போன் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News