சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இன்னும் எட்டப்படவில்லை. தேர்தலுக்கு பின்னர், திமுக கூட்டணியில் இருந்த 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளின் மூலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளும் தவெகக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.
இருப்பினும், ஆட்சியை அமைக்க தேவையான எண்கள் இன்னும் உறுதியாகவில்லை. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கும் என கூறப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வ கடிதம் வழங்கப்படாததால் அரசியல் இழுபறி நீடித்து வருகிறது. இதன் பின்னணியில், விசிக தலைவர் தொல். திருமாவளவன், மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புதிய அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளது. மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அமமுக வேட்பாளர் எஸ். காமராஜ் எழுதிய கடிதத்தை ஆளுநரிடம் தினகரன் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில், எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விஜய் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், ஆளுநர் மாளிகை இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
