தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதன் ஒரு பகுதியாக, அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர், இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக இன்று மதியம் சுமார் 2 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு வருகிறார். அதன் பின்னர் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.
அவரது பிரசாரம் விமான நிலையம் அருகிலுள்ள வயர்லஸ் சாலையில் தொடங்கி, தென்றல் நகர், கே.கே.நகர் பேருந்து நிலையம், காஜாமலை சாலை, இ.வி.ஆர். கல்லூரி சாலை, தமிழ்நாடு ஓட்டல் பகுதி, கோழிப் பண்ணை சாலை மற்றும் கொட்டப்பட்டு உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கியதாக இருக்கும். பிரசாரம் முடிந்ததும், இரவு 7 மணியளவில் அவர் மீண்டும் விமான நிலையத்தை அடைகிறார்.
இந்த பிரசாரத்திற்காக தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் முன்பே அனுமதி கோரப்பட்டது. தற்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் 27 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளார். குறிப்பாக, பிரசாரத்தின் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் கட்சிக்கொடிகள் அல்லது பதாகைகள் வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறாமல் செயல்பட வேண்டும் என்றும், அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டுதல் அல்லது விளம்பரங்கள் வைக்குதல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் வெடிபொருட்கள் பயன்படுத்துவதும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
