வடக்கு துருக்கியில் உள்ள ஒரு சோதனைப் பயிற்சி தளத்தில், பரிசோதனைக்குட்பட்டிருந்த ஒரு ட்ரோன் இதுவரை மனித விமானிகள் மட்டுமே செய்து வந்த செயலை தானாக செய்து காட்டி முக்கிய சாதனை படைத்துள்ளது. அதாவது, வானில் அதிவேக ஜெட் வேகத்தில் பாயும் இலக்கை தானாகவே கண்டறிந்து, அதை கண்காணித்து, மனித உதவியின்றி முழுமையாக அழித்துள்ளது.
இந்த சாதனையை நிகழ்த்தியது Bayraktar Kızılelma என்ற ட்ரோன் ஆகும். இது ஒரு சூப்பர்சோனிக் விமானத்தை துல்லியமாக தாக்கியுள்ளது. சமீபத்தில் துருக்கியின் கருங்கடல் கடற்கரை பகுதியில் உள்ள Sinop அருகே நடைபெற்ற சோதனையின் போது இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதுவரை ட்ரோன்கள் மெதுவாக வானில் பறக்கும் கண்காணிப்பு சாதனங்களாகவே பார்க்கப்பட்டன. ஆனால் Bayraktar Kızılelma அந்த பார்வையை முற்றிலும் மாற்றியுள்ளது.
சோதனையின் போது, இந்த ட்ரோன் தனது உட்புற சென்சார்கள் மூலம் இலக்கை கண்டறிந்து, அதை துரத்தி “லாக்-ஆன்” செய்து ஏவுகணையை செலுத்தியது. இவை அனைத்தும் மனித விமானி இல்லாமல் முழுமையாக தானியங்கி முறையில் நடந்தன.
“Bayraktar Kızılelma” என்ற பெயருக்கு “சிவப்பு ஆப்பிள்” என்று பொருள். இது துருக்கி புராணங்களில் இடம்பெறும் ஒரு சின்னமாகும்.
ஆறு டன்னுக்கும் அதிக எடையுடைய இந்த ட்ரோன், சாதாரண புரொபெல்லர் இயந்திர ட்ரோன்களைப் போல அல்லாமல், ஒரு இலகுரக போர் ஜெட்டுக்கு இணையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில் மேம்பட்ட ஏ.இ.எஸ்.ஏ (Active Electronically Scanned Array) ரேடார், நவீன அவியோனிக்ஸ் அமைப்புகள் மற்றும் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உட்புற செயற்கை நுண்ணறிவு அமைப்புடன் இணைந்து, போர்நிலைகளில் தற்காலிக முடிவுகளை எடுக்க உதவுகின்றன.
இந்த திட்டத்தை 2021 ஆம் ஆண்டு Baykar நிறுவனம் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. நான்கு ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வு மற்றும் சோதனைகளின் பிறகு, Bayraktar Kızılelma ட்ரோன் உருவாக்கப்பட்டது.
மேலும், இந்த ட்ரோன் ஏற்கனவே டேக்-ஆஃப் மற்றும் பறக்கும் வரம்பு தொடர்பான பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
