‘அமெரிக்காவை ஈரான் அசிங்கப்படுத்துகிறது!’ – டிரம்பிற்கு வந்த சோதனை..புலம்பும் ஜெர்மனி அதிபர்!

மத்திய கிழக்கு போர் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனி அதிபர் ஃபிரீட்ரிக் மெர்ஸ் விடுத்துள்ள அதிரடி விமர்சனம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான ஜெர்மனியே, “ஈரான் நாடானது அமெரிக்காவை உலக அரங்கில் அசிங்கப்படுத்தி வருகிறது” என்று வெளிப்படையாகப் பேசியிருப்பது வெள்ளை மாளிகையை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருபுறம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானை வீழ்த்திவிட்டதாக முழங்கினாலும், மறுபுறம் ஈரானியத் தலைவர்கள் அமெரிக்க அதிகாரிகளைப் பேச்சுவார்த்தைக்காகப் பாகிஸ்தான் வரை வரவழைத்து, இறுதியில் எவ்வித முடிவும் எடுக்காமல் வெறும் கையுடன் திருப்பி அனுப்புவது அமெரிக்காவிற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அவமானம் என்று அவர் சாடியுள்ளார்.

இந்த ஈரான் போரை அமெரிக்கா எப்படி முடிவுக்குக் கொண்டு வரப்போகிறது என்ற எந்த ஒரு தெளிவான திட்டமும் (Exit Strategy) ட்ரம்ப் அரசிடம் இல்லை என்பதே ஜெர்மனி அதிபரின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியபோது, தனது நட்பு நாடுகளான ஐரோப்பிய ஒன்றியத்தையோ அல்லது நேட்டோ நாடுகளையோ ஆலோசிக்கவில்லை என்பதை அவர் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களைப் போலவே இந்தப் போரும் ஒரு முடிவற்ற பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், இது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும், குறிப்பாக ஐரோப்பாவின் எரிசக்தி பாதுகாப்பையும் சீர்குலைத்து வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மிக முக்கியமாக, உலக நாடுகளின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் ஈரான் ரகசியமாகப் பல இடங்களில் கடல்வழி கண்ணிவெடிகளை (Mines) வைத்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை ஜெர்மனி உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் பாதையைத் திறக்க அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வரும் வேளையில், ஜெர்மனி தனது அதிநவீன கண்ணிவெடி அகற்றும் போர்க்கப்பல்களை அனுப்பத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஒருபுறம் பாகிஸ்தான் மற்றும் ஓமன் நாடுகள் அமைதிக்குத் தூது சென்றாலும், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் இப்போது ரஷ்யாவுடன் கைகோர்க்க மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது நிலைமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.

அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே உக்ரைன் விவகாரத்திலேயே ஏற்கனவே விரிசல் நிலவி வரும் நிலையில், இப்போது ஈரான் போர் அந்த விரிசலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. “ஈரானியர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதில் மட்டுமல்ல, பேச்சுவார்த்தையை நடத்தாமல் இழுத்தடிப்பதிலும் கில்லாடிகள்” என்று ஜெர்மனி அதிபர் குறிப்பிட்டிருப்பது, அமெரிக்காவின் இராஜதந்திரத் தோல்வியையே சுட்டிக்காட்டுகிறது. ட்ரம்ப் விடுத்து வரும் குண்டுவீச்சு மிரட்டல்களுக்கு மத்தியில், ஐரோப்பாவின் இந்தத் திடீர் எதிர்ப்பு சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிகார மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related News

Latest News