Saturday, January 17, 2026

டிரம்ப் சொன்னது பச்சைப் பொய்! பாகிஸ்தானே போட்டுடைத்த பகீர் ரகசியம்!

“இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கவிருந்த மிகப்பெரிய போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன்” என்று அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து மார்தட்டி வருகிறார். இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்திய உலகத் தலைவன் நான் தான் என்று அவர் திரும்பத் திரும்ப கூறிவந்த நிலையில், இப்போது அந்த மொத்த நாடகத்தையும் பாகிஸ்தானே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. டிரம்ப் சொன்னது அப்பட்டமான பொய் என்பதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரே முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். வாங்க, அந்த பகீர் பின்னணி என்னன்னு விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீர் பெஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா கடும் கோபத்தில் இருந்தது.அதை தொடர்ந்து இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. இந்தியாவின் இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அரண்டு போனது. அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில், அவர்களாகவே வலிய வந்து இந்தியாவிடம் சண்டை நிறுத்தம் செய்யும்படி கெஞ்சினார்கள்.

இந்தியா, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தது. இதில் எந்த ஒரு மூன்றாவது நாட்டின் தலையீடும் கிடையாது. அப்படி ஒரு தலையீட்டை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதுதான் நமது நாட்டின் உறுதியான நிலைப்பாடு.

ஆனால், இந்தச் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். “நான்தான் வர்த்தகத்தை காட்டி மிரட்டி, இரண்டு நாடுகளுக்கும் இடையே சமாதானம் பேசினேன். நான்தான் போரை நிறுத்தினேன்” என்று உலக அரங்கில் தம்பட்டம் அடிக்க ஆரம்பித்தார். சொல்லப்போனால், இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே, தனது சமூக வலைதளப் பக்கத்தில் “போர் நிறுத்தம் ஏற்பட்டது” என்று அவசர அவசரமாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் டிரம்ப்.

இத்தனை நாட்களாக டிரம்ப் சொன்னதுதான் உண்மை என்று சிலர் நம்பிக் கொண்டிருந்த நிலையில், இப்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார், ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் மொத்த உண்மையையும் போட்டு உடைத்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர் சொன்னது இதுதான்: “அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரூபியோ மூலமாக, மே 11 ஆம் தேதி காலை 8.17 மணிக்கு போர் நிறுத்தம் குறித்த ஒரு தகவல் எனக்கு வந்தது. உங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையே விரைவில் ஒரு பேச்சுவார்த்தை இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அதே ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி நான் ரூபியோவை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘இந்த விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தத்தை ஏற்க முடியாது என்றும், இது இரண்டு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை என்றும் இந்தியா மிகத் திட்டவட்டமாக கூறிவிட்டது’ என்று சொன்னார்” என இஷாக் தார் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சர் இப்போது சொல்வதை, இந்தியா அப்போதே மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டது. டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே, அன்றைய இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்றே தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. இதில் வேறு யாருடைய தலையீடும் இல்லை” என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

ஆக, டிரம்ப் தொடர்ந்து கூறிவந்தது ஒரு நாடகம் என்பது இப்போது பாகிஸ்தான் மூலமாகவே உறுதியாகியுள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தோம், ஆனால் இந்தியா விரும்பவில்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் இப்போது கூறுவது, அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா நிராகரித்ததை மறைமுகமாக ஒப்புக்கொள்வது போலத்தான் உள்ளது.

அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்பதை, பாகிஸ்தானே ஒப்புக்கொண்டதன் மூலம், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வளவு உறுதியானது என்பது உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

Related News

Latest News