ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி பேச்சுவார்த்தை தொடர்கதையாக நீடிக்கிறது. அதன் காரணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே ஃபோன்கால் பேச்சுவார்த்தை அவ்வப்போது நடந்து வருகிறது.
நேற்றைய தினம் ட்ரம்பும் புதினும் தொலைபேசியில் ஏறக்குறைய ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். அது தெரிந்த கதை தானே என்று கேட்பவர்களுக்கு ஒரு ட்விஸ்ட். அவர்கள் பேசிக்கொண்டதை விட, அதற்கு முன்பு நடந்த விஷயம் தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
நேற்று, புதின் ‘Strong Ideas For New Times’ என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து, புதினுக்கு ட்ரம்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. உடனே புதின், “தயவு செய்து, என் மீது கோபம் கொள்ளாதீர்கள். நாம் இன்னும் நிறைய பேச முடியும் என்பது எனக்கு புரிகிறது. ஆனால், ட்ரம்பை காக்க வைப்பது சங்கடமாக இருக்கும். அவர் கோபப்படலாம்” என்று அந்த நிகழ்ச்சிக்காக கூடியிருந்த மக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களிடம் கூறிவிட்டு மடமடவென கிளம்பியிருக்கிறார்.
இதற்கிடையில் உக்ரைனுக்கு பீரங்கிகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் கொடுப்பதை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதனால் சர்வதேச அரங்கில் புதின் மற்றும் ட்ரம்ப் இடையிலான பேச்சு வார்த்தை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.