Tuesday, December 16, 2025

டிரம்ப் போட்ட கையெழுத்து! மத்திய கிழக்கின் தலையெழுத்தை மாற்றிய அமெரிக்கா!

பல வருடங்களாக ரத்தம் சிந்திய பூமி, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்ட மோதல், உலகையே கண்ணீரில் ஆழ்த்திய காசாப் போர்… ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது! ஆம், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்!

சமீபத்தில், எகிப்துக்குப் பயணம் மேற்கொண்ட அதிபர் ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து இந்த காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பேசிய ட்ரம்ப், “ஒரு நீண்ட மற்றும் வலி நிறைந்த கனவு, இறுதியாக முடிவுக்கு வந்துவிட்டது. இது ஒரு புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல்!” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில், அமெரிக்காவுடன் இணைந்து எகிப்து, கத்தார், மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, நிரந்தர அமைதியை ஏற்படுத்த அதிபர் ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகளை நாங்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறோம். பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலியர்கள் உட்பட இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அமைதி, பாதுகாப்பு, மற்றும் ஸ்திரத்தன்மை கிடைப்பதை நாங்கள் ஒன்றாக உறுதி செய்வோம்” என்று கூறியுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், போரை நிறுத்துவது மட்டுமல்ல, போரால் சிதைந்து போன காஸா பகுதியை மீண்டும் கட்டமைப்பதும்தான்.

திரும்பி வரும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நான் ஒரு நாடு தீர்வா, ரெண்டு நாடு தீர்வானு பேச வரல. நாம காஸாவை திரும்பக் கட்டுறதைப் பத்தி பேசிட்டு இருக்கோம். அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்” என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “இந்தப் பகுதி, கிறிஸ்தவம், இஸ்லாம், யூத மதம் என பல மதங்களின் புனிதத் தலங்களைக் கொண்டது. அந்தப் புனிதத் தலங்களைப் பாதுகாத்து, அனைத்து மக்களும் அமைதியாக ஒன்றாக வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம். வருங்கால சந்ததியினர் அமைதியாக செழித்து வாழ, ஒரு உறுதியான அடித்தளத்தை நாங்கள் அமைத்திருக்கிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News