அலாஸ்காவில் நாளை உச்சி மாநாட்டு நடைபெறவிருக்கிறது. அதில் உக்ரைன் மீதான போரை நிறுத்துவது குறித்து ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால், ரஷ்யா மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அலாஸ்காவில் முதல் உச்சி மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா போரை நிறுத்த மறுத்தால், ‘மிகவும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று ஏறக்குறைய மிரட்டும் தோரணையில் கூறியிருப்பது உச்சபட்ச அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
புதின் உடனான உரையாடல்களுக்கு பிறகும் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை தாம் பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். எனவே, தனது பேச்சுவார்த்தை போரை நிறுத்துவதில் பலனளிக்கவில்லை என்றும் கூறியிருப்பது அவர் கோபத்தில் இருப்பதையே வெளிப்படுத்துகிறது.
டிரம்ப் மேலும் கூறுகையில், புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் இரண்டாவது சந்திப்புக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அது முதல் சந்திப்பை விட கூடுதல் பலனளிப்பதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘முதல் சந்திப்பில், நாம் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை நான் கண்டறிவேன்,’ என்று கூறிய டிரம்ப், அவர் உடனடியாக ஒரு இரண்டாவது சந்திப்பை நடத்த விரும்புவதாகவும் ஜனாதிபதி புடின், ஜெலென்ஸ்கி மற்றும் அவரும் அங்கே இருக்க விரும்பினால், ஒரு விரைவான இரண்டாவது சந்திப்பை நடத்துவோம் என்றும் கூறினார்.
மேலும் ரஷ்யா அமைதிக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காதவரை, தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் உக்ரைனுக்கு ஆதரவை பலப்படுத்த வேண்டும் என்றும் டிரம்ப் கூறியிருப்பது அவரின் அடுத்தகட்ட நடவடிக்கை மிகவும் தீவிரமாக இருக்கும் என்பதையே வெளிப்படுத்துகிறது.