இந்தியாவை சேர்ந்த ஐடி ஊழியர்கள் அமெரிக்கா சென்று பணி புரிவதற்கு உதவியாக இருக்கும் ஹெச்1பி விசா நடைமுறையில் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு மாற்றங்களை அறிவித்த வண்ணம் இருக்கிறது.விசா விண்ணப்பங்களை ஆய்வு செய்வது ,ஏற்பது உள்ளிட்ட விதிமுறைகளை மிகவும் கடுமையானதாக மாற்றியது டிரம்ப் நிர்வாகம். குறிப்பாக விசா வேண்டி விண்ணப்பம் செய்பவர் மற்றும் அவரை சார்ந்திருப்பவர்களின் சமூக வலைதள பதிவுகளை கூட ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதன் காரணமாக விண்ணப்பம் செய்த பலருக்கும் காரணமே இல்லாமல் அது நிராகரிக்கப்படுவது மட்டும் இல்லாமல், விசா சரிபார்ப்பு பல மாதங்கள் தாமதமாகி வருகிறது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. அதில் ஹெச்1பி விசா திட்டத்திற்கு மூன்று ஆண்டு காலம் தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஹெச்1பி விசா திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் இந்த விசாவை பயன்படுத்தி ஏராளமான நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தில் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்து வந்து வேலை வாங்குகின்றன, இந்த விசா நடைமுறை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதன்படி ஹெச்1பி விசா திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென கோரப்பட்டிருக்கிறது. அதன்படி ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் டாலர்கள் ஊதியம் இருப்பவர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்குவது என்பன உள்ளிட்ட மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என அதில் கேட்கப்பட்டிருக்கிறது.ஹெச்1பி விசாவில் அமெரிக்கா வருபவர்கள் தங்கள் சார்ந்தவர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என அதில் கேட்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் ,அமேசான் , டெஸ்லா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஹெச்1பி விசா மூலமாக தான் திறமையான ஊழியர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்து வேலை வாங்குகின்றன.
இந்த சூழலில் இந்தியர்கள் தான் அதிக அளவில் இந்த விசாவில் அமெரிக்காவிற்கு சென்று வேலை செய்கிறார்கள். இப்போது அமெரிக்காவில் இருக்கக்கூடிய கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை . மைக்ரோசாப்ட் சத்ய நாதெல்லா போன்ற அனைவருமே ஹெச்1பி விசா மூலம் அமெரிக்கா சென்ற பின்னர் அங்கே கிரீன் கார்டு வாங்கி செட்டில் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சியினர் ஹெச்1பி விசா அமெரிக்கர்களின் வேலைகளை பறித்து வருகிறது என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்களை அழைத்து வந்த வேலை வாங்கி அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பினை மறுக்கின்றன என குற்றம் சாட்டுகின்றனர்
