Friday, April 25, 2025

அதிரடியாக டிரம்ப் சுழற்றிய போர்வாள்! நுனியில் சிக்கிய நாடுகள் என்னென்ன தெரியுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு எதிராக புதிய ரெசிப்ரோக்கல் வரி கொள்கையை அறிவித்துள்ளார். இந்த கொள்கையின் மூலம் பல நாடுகளுக்கு பரஸ்பரமாக வரிவிதித்து இருக்கிறார்.அதிகபட்சமாக கம்போடியா மீது 49 சதவீதமும், வியட்நாம் மீது 46 சதவீதமும் மற்றும் இலங்கை மீது 44 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் உலகப் பொருளாதாரத்தில் பரபரப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் இது சர்வதேச வர்த்தக போரை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

டிரம்ப், கடந்த சில வாரங்களாக இந்த ரெசிப்ரோக்கல் வரி பற்றி எச்சரித்துக் கூறியிருந்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலக நாடுகள் தற்போது அமெரிக்காவுக்கு எந்த அளவு வரி வசூலிக்கின்றன என்ற நிலைமையை கருத்தில் கொண்டு, 50 சதவீதம் வரி மட்டுமே தற்போது ரெசிப்ரோக்கல் வரி ஆக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த வரி அமெரிக்காவின் “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து இறக்குமதிகளுக்கும் 10 சதவீதம் அடிப்படை வரி விதிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப், இந்த கொள்கையை “விடுதலை நாள்” என்று கூறி, இது அமெரிக்காவை ஒரு வலுவான பொருளாதாரமாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். வரியை தவிர்க்க விரும்பும் நிறுவனங்களுக்கு, “அமெரிக்காவில் உற்பத்தி செய்ய தொடங்குங்கள்” என்ற அறிவுறுத்தலை அவர் கொடுத்திருக்கிறார். இந்த புதிய வரி கொள்கை உலக நாடுகள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கம்போடியா மீது 49 சதவீதமும், வியட்நாம் மீது 46 சதவீதமும், இலங்கை மீது 44 சதவீதமும், சீனா மீது 34 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியம் மீது 20 சதவீதமும், ஜப்பான் மீது 24 சதவீதமும், தென் கொரியா மீது 25 சதவீதமும், இந்தியா மீது 26 சதவீதமும், தாய்லாந்து மீது 36 சதவீதமும், சுவிட்சர்லாந்து மீது 31 சதவீதமும், இந்தோனேசியா மீது 32 சதவீதமும், மலேசியா மீது 24 சதவீதமும், தைவான் மீது 32 சதவீதமும், பிரேசில் மீது 10 சதவீதமும், ஐக்கிய இராச்சியம் மீது 10 சதவீதமும், தென்னாப்பிரிக்கா மீது 30 சதவீதமும், வங்கதேசம் மீது 37 சதவீதமும், சிங்கப்பூர் மீது 10 சதவீதமும், இஸ்ரேல் மீது 17 சதவீதமும், பிலிப்பைன்ஸ் மீது 17 சதவீதமும், சிலி மீது 10 சதவீதமும், ஆஸ்திரேலியா மீது 10 சதவீதமும், பாகிஸ்தான் மீது 29 சதவீதமும், துருக்கி மீது 10 சதவீதமும் மற்றும் கொலம்பியா மீது 10 சதவீதமும் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த ரெசிப்ரோக்கல் வரி 9-ஆம் தேதி, ஏப்ரல் மாதம் 12.01 மணி முதல் அமலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது

Latest news