டிரம்பின் அமளி துமளி அறிவிப்புகள்! இனி தங்கத்தின் டிமாண்ட் எப்படி இருக்கும்? விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா?

கடந்த ஏப்ரல் 2ம் தேதியன்று அமெரிக்காவின் விடுதலை நாளன்று எதிர்ப்பார்த்தபடியே உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் வர்த்தகப் போரை அறிவித்துவிட்டார். பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பு அமல்படுத்தப்படத்தையடுத்து உலகச் சந்தைகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான முதலீடாக பலர் தங்கத்தை நோக்கி படையெடுப்பதால் தங்கத்தின் டிமாண்ட் அதிகரித்து விலையும் உலக அளவில் இறக்கை கட்டி பறக்கிறது.

இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3038 டாலராக விற்கப்படுகிறது. ஒரு அவுன்ஸ் என்றால் 28.34 கிராம். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் அவுன்ஸ் மதிப்பீட்டிலேயே தங்கம் விற்பனை செய்யப்படுகிறது என்கின்ற அடிப்படையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இந்திய மதிப்பில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 394.69 ரூபாயாக இருக்கிறது என்பது நடுத்தர மக்களை சற்றே அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. வரும் காலங்களில் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என்பதால் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும் என கணிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பால் உலகின் பல பணக்காரர்கள் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான சொத்து மதிப்பை பறிகொடுத்து ஆட்டம்கண்டு விட்டனர். இந்த அமளி துமளி ஒரு புறம் என்றால் உலக அளவில் தங்கத்தின் விலையும் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்றதை தொடர்ந்து தற்போது வரை 20 முறை தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பது விழிபிதுங்க வைக்கிறது.

இந்தியாவை பொருத்தவரை இன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 9 ஆயிரத்து 65 ரூபாயாகவும், 22 கேரட் தங்கம் 8 ஆயிரத்து 39 ரூபாயாகவும் இருக்கிறது. மற்ற நாடுகளில் இந்திய மதிப்பில் கத்தாரில் 8 ஆயிரத்து 47 ரூபாயாகவும் ரூபாயாகவும், சவுதி அரேபியாவில் 8 ஆயிரத்து 115 ரூபாயாகவும், சிங்கப்பூரில் 8 ஆயிரத்து 419 ரூபாயாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 8 ஆயிரத்து 157 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி அதிகபட்சமாக தங்கத்தின் விலை 3077 டாலராக உயர்ந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது தங்கத்தின் விலை சிற்சில சறுக்கல்களை சந்திக்கும் நிலையில் இன்னும் சில நாட்கள் வரை இந்த ஏற்ற இறக்கம் இருக்க கூடும் எனவும் அதிகபட்சமாக சில நாட்களில் 3 ஆயிரத்து 110 டாலர் என்ற அளவில் விலை அதிகரிக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை கண்டிப்பாக முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.