டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் அவரின் அனல் பறக்கும் உத்தரவுகள் அன்றாடம் தலைப்பு செய்தியாகவே மாறிவிட்டன. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரியால் பல்வேறு பின்விளைவுகள் சர்வதேச நாடுகளை பதறவிடுகின்றன. இந்நிலையில் திடீரென கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து மளமளவென குறைந்து வருகிறது. மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகும் கூட இதன் விலை குறைந்திருப்பதற்கு என்ன தான் காரணம்?
டிரம்பின் வரி அறிவிப்பு சர்வதேச வர்த்தக போரை கிளப்பிவிட்டால் வணிகம் பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெயின் தேவை குறைந்ததன் காரணமாகவே எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது. அதாவது டிரம்ப் வரியை அறிவித்த உடனேயே கச்சா எண்ணெய் விலை 2 டாலர் வரை சரிந்துள்ளது.
உலகின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதி தென்கிழக்கு நாடுகளே பூர்த்தி செய்கின்றன என்பதால்
இது போன்ற கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்படுவது மத்திய கிழக்கு நாடுகளாகவே இருக்கும்.
டிரம்ப் வரிகளை அறிவிப்பதற்கு முன்பு வரை கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்தே இருந்தாலும் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட வெளியிட நிலைமை தலைகீழானது. குறிப்பாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% வரியை அறிவித்த டிரம்ப், வரி இருக்கக்கூடாது என்றால் அமெரிக்காவிலேயே உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கச்சா எண்ணெய் விலை மொத்தமாக தரைதட்டிவிட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரசரவென சரிந்துள்ள நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு பல தரப்பு மக்களிடமும் தலைதூக்கியுள்ளது. ஆனால், நமது நாட்டில் வரி உட்பட பல்வேறு காரணிகள் இருப்பதால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பது பற்றிய முடிவை மத்திய அரசே எடுக்கும் என்று கூறப்படுகிறது.