இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது நான் தான் என்று ட்ரம்ப் அடிக்கடி கூறி வந்தார். மேலும், இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்தது போன்ற காரணங்களால் சமீபத்தில் இந்தியா – அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மட்டுமல்லாமல், ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் பேச முயற்சித்ததாகவும் ஆனால் 4 முறை ட்ரம்ப் அழைப்பை மோடி ஏற்காததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம், “இந்தியாவுடன் உறவை புதுப்பிப்பீர்களா?” எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், ‘நான் எப்போதும் அதனை செய்வேன். நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்தத் நேரத்தில் அவருடைய செயல் எனக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு மிகவும் சிறப்பாகவே உள்ளது. அதனால், இது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவது இதுபோன்ற சூழல் ஏற்படுவதுண்டு. மற்றபடி, நான் எப்போதும் மோடியுடன் நன்றாகப் பழகி வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் அமெரிக்கா வந்து சென்றார்’ என்றார்.
இதற்கு பிரதமர் மோடியும் உடனடியாக பதிலளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘அதிபர் ட்ரம்ப்பின் உணர்வுகளையும், இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த அவரது நேர்மறையான மதிப்பீட்டையும் நான் ஆழமாகப் பாராட்டுகிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் மிக நேர்மறையான, முன்னோக்குச் சிந்தனையுடன் விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன.’ என்று கூறியிருக்கிறார். இருப்பினும் ட்ரம்ப் பயன்படுத்திய ‘நண்பர்’ என்ற வார்த்தையை மோடி உபயோகிக்கவில்லை. இது தற்போது கவனம் பெற்றுள்ளது.