ரஷ்ய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல் சூடுபிடித்துள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த நாட்களில் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனை தொடர்ந்து அமெரிக்க அரசு ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது.
ட்ரம்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணையை கொள்முதல் செய்வதால் இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். மேலும், இந்தியா மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரங்கள் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்கள் என்று ட்ரம்ப் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவரான Dimitry Medvedev, ட்ரம்புக்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், Dimitry Medvedev-வின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாத வகையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்ய பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன். வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. அவை எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும்’ என எச்சரிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.
இருப்பினும், எந்த பகுதிகளுக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பதையும் அவை அணு ஆயுத தாக்குதல் நடத்தக் கூடிய கப்பல்களா என்பது குறித்தும் ட்ரம்ப் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.