‘டிரம்ப் ஒரு பயங்கரவாதி!’- ஓப்பனாக வெளுத்த ஈரான்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் இப்போது ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் போராக உருவெடுத்துள்ளது. உலக நாடுகளின் எரிசக்தித் தேவையில் ஐந்தில் ஒரு பகுதியை பூர்த்தி செய்யும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் எச்சரிக்கைகளையும், சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் ஒரு “வெற்றுப் பேச்சு” என்று ஈரான் பகிரங்கமாக நிராகரித்துள்ளது. குறிப்பாக, ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC), ட்ரம்ப்பை ஒரு “பயங்கரவாத அதிபர்” என்று விமர்சித்துள்ளதோடு, அவர் ஒரு போர்க் குற்றவாளி என்றும், அவரது வார்த்தைகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் எவ்வித மதிப்பும் இல்லை என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா தனது தரப்பில் ஈரானியத் துறைமுகங்கள் மீது விதித்துள்ள கடல்வழி முற்றுகையை முழுமையாக விலக்கிக் கொள்ளும் வரை, இந்த ஜலசந்தி வழியாக எந்தவொரு கப்பலும் செல்ல அனுமதிக்கப்படாது என்று ஈரான் அறிவித்துள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8 சதவீதம் வரை எகிறியுள்ளது.

முன்னதாக, இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வு எட்டப்பட்டதாக ட்ரம்ப் கூறியிருந்தது வெறும் “கற்பனை” என்றும், தனது நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தும் அமெரிக்காவின் செயலுக்கு இதுவே சரியான பதிலடி என்றும் ஈரான் தரப்பில் கூறப்படுகிறது. ட்ரம்ப்பின் பேச்சுக்கள் வெறும் அரசியல் நாடகம் என்று வர்ணித்துள்ள ஈரான், அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பணியும் காலம் முடிந்துவிட்டது என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளது.

தற்போது ஹார்முஸ் ஜலசந்தியின் குறுகிய பகுதிகளில் ஈரானின் அதிவேக தாக்குதல் படகுகள் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஏதாவது கப்பல் இந்த தடையை மீற முயன்றால், அது எதிரி நாட்டுச் சொத்தாகக் கருதப்பட்டுத் தாக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் படங்களின்படி, ஓமன் வளைகுடாவிற்கு வெளியே நூற்றுக்கணக்கான எண்ணெய் டேங்கர் கப்பல்கள் செய்வதறியாது நங்கூரமிட்டு வரிசையாகக் காத்திருக்கின்றன. இந்த நடவடிக்கை உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு முயற்சி என்று வர்ணித்துள்ள அமெரிக்கா, இதற்கு ஈடாக ஈரானின் உள்நாட்டு உள்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிபர் ட்ரம்ப் இந்த இக்கட்டான சூழலில் தனது வார இறுதி ஓய்வைக் கழிக்கச் சென்றுள்ள நிலையில், பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகள் ஈரானின் இந்த முற்றுகையைக் கடுமையாக விமர்சித்துள்ளன. இருப்பினும், ஈரானோ “அமெரிக்காவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் காலம் முடிந்துவிட்டது” என்று பிடிவாதமாக உள்ளது. இந்த ஜலசந்தி மூடல் உலக அளவில் ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்துமா அல்லது அமெரிக்கா தனது ராணுவ பலத்தைக் கொண்டு இதனை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News