காசா மீதான குண்டுவீச்சை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ட்ரம்பின் இந்த முன்மொழிவுக்கு பதிலளித்த ஹமாஸ், அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவித்து, மத்தியஸ்தர்களின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், அதிகார மாற்றத்துக்கும் தாங்கள் தயாராக உள்ளதாக ஹமாஸ் குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைப்பாட்டை ட்ரம்ப் வரவேற்று, ஹமாஸ் தனது இறுதி எச்சரிக்கையை பகுதியளவில் ஏற்றுக்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இன்னும் நீடிப்பதால், தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் அவசியம் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, ஹமாஸ் இறுதி ஒப்பந்தத்திற்கு சம்மதிக்காவிட்டால், இதுவரை யாரும் சந்திக்காத கடுமையான விளைவுகள் உருவாகக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை, போரின் போக்கு குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
காசா போரின் தீவிரம் குறையுமா அல்லது மேலும் சிக்கலாகுமா என்பது ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அடுத்தடுத்த நடவடிக்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இந்நிலையில், ட்ரம்பின் உத்தரவு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.