இந்தியாவை ‘நரகம்’ என்ற டிரம்ப்! – அடுத்த 24 மணி நேரத்தில் நடந்த சரியான ‘சம்பவம்’?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு சர்ச்சை கருத்து, தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராஜதந்திர உறவில் ஒரு புதிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இந்த விவகாரத்தைக் கவனிப்பதாக மட்டும் கூறிய இந்திய வெளியுறவுத் துறை, தற்போது தனது அதிருப்தியை மிகக்கடுமையாக வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ட்ரம்பின் அந்த ‘ஹெல்ஹோல்’ (Hellhole) கருத்து, தகவல் அறிவற்றதாகவும், மிகவும் தரக்குறைவான ஒன்றாகவும் இருக்கிறது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது போன்ற கருத்துக்கள், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால நட்புறவின் உண்மையான சாராம்சத்தை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை தொடர்பாக நடந்த விவாதத்தின்போது, மைக்கேல் சேவேஜ் என்ற வர்ணனையாளர் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைத் தரக்குறைவாக விமர்சித்திருந்தார். அதை ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்ததே இந்த ஒட்டுமொத்த சர்ச்சைக்குக் காரணம்.

இதற்கு இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விடுத்துள்ள கண்டனம், “இதுபோன்ற கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் மரியாதைக்குக் குறைவானவை” என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது. இந்தியா ஒரு வளர்ந்து வரும் வல்லரசு என்பதை உணர்த்தும் வகையில், தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு இந்தியா அமைதி காக்காது என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் உடனடியாகச் சமாளிக்கும் முயற்சியில் இறங்கியது. அதிபர் ட்ரம்பிற்கு இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் மிகுந்த மரியாதை உண்டு என்று கூறி, அந்தத் சர்ச்சையைத் தணிக்க முயன்றது.

இருப்பினும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இந்த அதிரடி அறிக்கை, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு என்பது பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஒரு நண்பனாக அமெரிக்கா என்ன நினைக்கிறதோ, அதைவிட இந்தியாவிற்குச் சுயமரியாதைதான் முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் உலக அரங்கில் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

Related News

Latest News