நடப்பு IPL தொடரில் வரிசையாக 5 போட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றுள்ளது. குறிப்பாக சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் தோல்வியைத் தழுவி, ரசிகர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டது . இதனால் நடப்பு தொடரில் சென்னை அணியின் பிளே ஆப் கனவு கானல் நீராகி விட்டது.
இந்தநிலையில் மெகா ஏலத்தில் சென்னை தவறவிட்ட, வீரர்களின் லிஸ்டை எடுத்த ரசிகர்கள், ”உங்க கஞ்சத்தனத்தால இம்புட்டு நல்ல வீரர்களை, எல்லாம் மிஸ் பண்ணி இருக்கீங்களே,” என்று, சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
அவர்கள் கொந்தளிப்பதற்கும் காரணம் இருக்கிறது. ஏனெனில் கேஎல் ராகுல், மேக்ஸ்வெல், ஜித்தேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே போன்ற திறமையும், அனுபவமும் வாய்ந்த வீரர்களை எல்லாம், தங்களது பட்ஜெட்டுக்கு ஒத்து வரவில்லை என விட்டுவிட்டனர்.
இதேபோல அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ராபின் மின்ஷ், குமார் குஷகரா உள்ளிட்ட இளம்வீரர்களையும் கொஞ்சம் முயன்று பார்த்து ஒதுங்கி விட்டனர். ராகுலை ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு தான் டெல்லி தூக்கியது. ராகுலுக்காக 13 கோடி வரை முயற்சித்த சென்னை, கொஞ்சம் கையை மீறி செல்லவும் ஆப் ஆகிவிட்டனர்.
ஓபனர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என அத்தனை ரோல்களையும், திறமையாக செய்யக் கூடியவர் ராகுல். இதேபோல ஜித்தேஷ் சர்மாவும் விக்கெட் கீப்பர் மற்றும் பவர்ஹிட் பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். இவர்களில் ஒருவரை எடுத்து போட்டிருந்தாலும், சென்னை இந்தளவுக்கு அடி வாங்கியிருக்காது.
இவர்களை விடுத்து பார்மில் இல்லாத விஜய் சங்கர், ராகுல் திரிபாதியை எடுத்து வைத்துக்கொண்டு, CSK தற்போது தடுமாறி, தத்தளித்து வருகிறது. இந்த தொடர் தோல்விகளில் இருந்து சென்னை மீண்டு வருமா?