கரூர் பயணம்; முதல்வர் விஜயின் முதல் அரசு நிகழ்ச்சி… எங்கெல்லாம் செல்கிறார்… பயண திட்டம் இதோ

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், முதலமைச்சர் விஜய் தனது முதல் அரசு திட்ட தொடக்க நிகழ்ச்சிக்காக நாளை கரூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பணி நியமன ஆணைகளையும் வழங்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ விவரங்களை கரூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மனவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள Evervan Kothari Footwear Private Limited நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார். தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யும் இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும் வகையில் 32 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்க உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அரசு வேலை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் பங்கேற்கும் முதல் அரசு திட்ட தொடக்க நிகழ்ச்சி என்பதால், கரூர் பயணம் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Related News

Latest News