Thursday, May 22, 2025

சிபில் ஸ்கோர் மோசமா இருக்கா? இந்த டிரிக் ஒருமுறை ட்ரை பண்ணுங்க

பொதுவாக நமக்கு அவசர தேவைகள் ஏற்பட்டால், வங்கிகளிடம் கடன் (loan) பெறும் சூழ்நிலை ஏற்படலாம். அப்போது, சிபில் ஸ்கோர் எனப்படும் நம்பகத்தன்மை மதிப்பெண் மிக முக்கியமான காரணியாக பார்க்கப்படும். இந்த மதிப்பெண் குறைவாக இருந்தால், கடன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுவிடும்.

சில நேரங்களில், சில தவறான நிதி பழக்கங்களால் சிபில் ஸ்கோர் குறைவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இப்படிப் பட்ட சூழ்நிலையில், நிபுணர்கள் பரிந்துரை செய்யும் வழிகளில் ஒன்றாக, கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம்.

அதற்காக, நம்முடைய சேமிப்பு கணக்கு இருக்கும் வங்கியை அணுகி, அந்த வங்கியில் ஒரு நிரந்தர வைப்பு (Fixed Deposit) கணக்கை தொடங்கலாம். அதன் அடிப்படையில், வங்கி மேலாளரிடம் சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதைத் தெளிவாக கூறி, அந்த வைப்பு நிதியை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாதுகாக்கப்பட்ட கிரெடிட் கார்டு (Secured Credit Card) பெறலாம்.

பின்னர், மாதந்தோறும் அக்கிரெடிட் கார்டை உபயோகித்து நம் செலவுகளைச் செய்யலாம். ஆனால், அதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கிரெடிட் கார்டின் வரம்பு முழுவதையும் பயன்படுத்தாமல், அதிகபட்சம் 30% மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும், கிரெடிட் கார்டு பில்களை ஒவ்வொரு மாதமும் தவறாமல், காலதாமதமின்றி முழுமையாகச் செலுத்துவது மிக அவசியம். இதுபோன்ற ஒழுங்குமுறை நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றினால், காலப்போக்கில் நம் சிபில் ஸ்கோர் உயரும்.

இந்த நடைமுறையில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகையை நேரத்துக்குள் கட்டுவது தான். இதை தவிர்த்தால், எதிர்பாராத நிதிச் சுமைகளும், சிபில் ஸ்கோரின் மேலும் வீழ்ச்சியும் ஏற்படலாம் என நிதி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Latest news